பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
அவரின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத்தலைவர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.
மேலும், ராணியின் இறுதிச்சடங்குக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 3 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பல்வேறு காரணத்தின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், உக்ரைன் மீதான படையெடுப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மற்றும் அதற்கு உதவும் பெலாரஸ் ஆகிய நாடுகளை தனிமைப்படுத்த பிரிட்டன் விரும்புவதால் இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதேநேரம் ஒரு காலத்தில் தனது காலனியாக இருந்த பர்மா என்று அழைக்கப்படும் மியான்மர் நாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அது தவிர அங்கு சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனஅழிப்பு நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகள் மியான்மர் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதேபோல மியான்மர் நாட்டிற்கும், அதன் ராணுவத்துக்கும் பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.இதன் காரணமாகதான் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.