மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு என நாடே கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசு பெட்ரோல் -டீசல் விலையை உயர்த்தி மற்றொரு பக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் விலையை உயர்த்தாமல் ஒன்றிய அரசு அலட்சியம் செய்து வருகிறார். இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து நாட்டின் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
இதேபோன்று பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கு ஏற்படும் என பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். பணவீக்க உயர்வு தொடர்பான கேள்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நிலையில் பணவீக்கம் இல்லை எனவும், வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானப் பகிர்வில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு பொருளாதார நிபுணர்களும் நிர்மலா சீதாராமனின் செயலை விமர்சித்தனர். இந்த நிலையில், தற்போது முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள அவர், “பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது.
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.