அரசியல்

“சனாதனம் பேசும் ஆளுநர் ரவிக்கு அது சொல்லும் அர்த்தம் தெரியுமா?” : பட்டியலிட்டு பாடம் எடுத்த முரசொலி !

'பெண்ணை தனியாக விட்டால் தப்பு நடக்கும்' என்றும் இன்னமும் உட்கார்ந்து சிலர் கதாகலாட்சேபம் செய்து வருகிறார்கள் அல்லவா இதுதான் சனாதனம். இதனைத்தான் ஆளுநர் விரும்புகிறாரா?”

“சனாதனம் பேசும் ஆளுநர் ரவிக்கு அது சொல்லும் அர்த்தம் தெரியுமா?” : பட்டியலிட்டு பாடம் எடுத்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சனாதனக் காவலராக காட்டிக் கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாடம் புகட்டும் வகையில் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. முரசொலி நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள தலையங்கத்தில், “ஆளுநர் உதிர்த்து வரும் ஆன்மிக - தத்துவமுத்துக்கள் அபத்தக் களஞ்சியமாக இருந்து வருகின்றன. அவரது ஆன்மிகம் என்பது அவரது உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் பேசிய பேச்சு என்பது - தன்னை சனாதனக் காவலராக காட்டிக் கொள்ளும் வகையில் பேசி இருக்கிறார். சனாதன சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார் என்பதையே இதன் மூலமாக அறிய முடிகிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழி முறையாக இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர்.

இவருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. சனாதன தர்மம் என்றால் என்ன என்று அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும்.

பூரி ஜகநாதர் கோவிலுக்குள் அவரைச் செல்லவிடாமல் தடுத்தது சனாதனம்.

“கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு சக மனிதனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்துவது சனாதனம். எறும்புக்குச் சக்கரை போட்டுவிட்டு, மனிதனின் குடிநீர் உரிமையை மறுக்கும் இத்தகைய கபட வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம்” என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். இதுதான் சனாதனம்.

மனிதனை சாதியாக பிரித்து, சாதிக்குள் உயர்வு தாழ்வை புகுத்தி இன்னார்க்கு இன்னது என்று வகுததற்குப் பெயரே சனாதனம்.

தவம் செய்த சம்பூகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அழித்தது சனாதனம்.

குரு இல்லாமல் ஆயுதப் பயிற்சி பெற்றதால் ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாக வாங்கியது சனாதனம்.

‘நீட்' என்பது சனாதனத்தின் நவீன வடிவம்.

புதிய கல்விக் கொள்கை புதிய மனு. இவை சமூகநீதிக்கு எதிரானவை.

சனாதனத்தால் அதிகமாக நசுக்கப்பட்ட இனம் பெண்ணினம். மனுஸ் மிருதியை படித்தால் தெரியும்.

சனாதனத்தை ஆதரிக்கும் ‘ஆண் சனாதனிகள்' தங்கள் வீட்டுப் பெண்களுக்கு மத்தியில் அதை படிக்க முடியுமா? தங்கள் மகள்களைத்தான் அப்படி நடத்த முடியுமா?

‘பெண்கள் வேலைக்கு போனதால்தான் வேலையில்லா திண்டாட்டம் வருகிறது' என்றும், 'பெண்ணை தனியாக விட்டால் தப்பு நடக்கும்' என்றும் இன்னமும் உட்கார்ந்து சிலர் கதாகலாட்சேபம் செய்து வருகிறார்கள் ( இணையத்தில் இந்த காணொளிகள் இருக்கின்றன) அல்லவா இதுதான் சனாதனம். இதனைத்தான் ஆளுநர் விரும்புகிறாரா?”

“சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப் பட்டது” என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர்.

என்ன சொல்ல வருகிறார்? அதே போலக் குண்டு போடச் சொல்கிறாரா? ‘கிறிஸ்தவ' அமெரிக்கா - ‘சனாதன' அமெரிக்காவாக ஆகிவிட்டது என்கிறாரா? இனி அமெரிக்கா செய்யும் அனைத்துச் செயலும் சனாதனத்தைக் காப்பாற்றச் செய்யும் செயல் தானா? பாகிஸ்தானுக்கு அவர்கள் உதவி செய்தாலும் அது சனாதனத் தொண்டா? என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்துதான் பேசுகிறாரா ஆளுநர்?

ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல!”என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories