மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில், சென்னையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். கொடநாடு பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்கள், கட்சியினரிடம் எழுதி வாங்கிய கடித நகல்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் பல முக்கிய தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல், பங்களாவில் பணியாற்றிய மேலாளர், சமையலர், காவலாளிகள், கார் டிரைவர்களை பணிக்கு பரிந்துரை செய்தவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர், கோவை, ஈரோடு, சேலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முதற்கட்டமாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை நடந்த நாளன்று, எஸ்டேட் பங்களாவில் பணியில் இருந்தவர்களின் மொபைல் போன் எண்களில் தொடர்புகொண்டு பேசியவர்களின் பட்டியல் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இந்த விவரங்களை கொண்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.கவினர் சிலரிடம் விசாரணை நடத்த, தனிப்படை போலிஸார் பட்டியலை தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.வி.ஐ.பி, ஒருவருடன் நெருக்கத்தில் இருந்து வந்த வி.ஐ.பி பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சர்கள், மாவட்ட செயலர்களுடன் நெருக்கமாக இருந்த போலிஸ் அதிகாரிகளுக்கு, இந்த வழக்கில் தொடர்புள்ளதா என விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களது பட்டியலையும் தனிப்படை போலிஸார் தயாரித்துள்ளனர்.
தனிப்படையினர் பட்டியல் தயாரிப்பால், கொங்கு மண்டல அ.தி.மு.கவினர் மட்டுமின்றி, கொங்கு மண்டலத்தில் பணியாற்றிய முன்னாள் போலிஸ் அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்.
இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க மாநில வர்த்தக அணியின் சஜீவனிடம் கோவையில் பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடைபெற்றது.