பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் தி.மு.க கவுன்சிலராக ம.சேகர் என்பவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் தோல்வியடைந்தார். இப்படி இருக்கையில் நாளை அ.தி.மு.க சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டரை அ.தி.மு.க பிரமுகர் நாகராஜ் என்பவர், சேகர் வீட்டின் சுவற்றில் ஒட்டியுள்ளார்.
என் வீட்டில் அ.தி.மு.க போஸ்டர் ஒட்டக்கூடாது எனக்கூறிய சேகர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தி.மு.க கவுன்சிலர் சேகரை சராமரியாக தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த சேகரின் சகோதரர் குமார் என்பவரையும் தாக்கியுள்ளார்.
இது குறித்து சேகர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் உத்தரவின் பேரில், நகர காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனையடுத்து, தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன் தலைமையில், கவுன்சிலர்கள் பாரி, சிவக்குமார், தங்கமயில் செந்தில், ரகமத்துல்லா, துரை.காமராஜ், சித்ரா, நல்லுசாமி, சசி இன்பெண்டா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.