ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கோவில்கள் மட்டும் இடிக்கப்படுவதாக கூறி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும், அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களையும், டிவிட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.