கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலுக்கு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எம். ராமசாமி என்பவர் 26 லட்சத்து 42 ஆயிரத்து 232 ரூபாய் மதிப்பில் பாண்டியன் கொண்டை என்ற கிரீடத்தை நன்கொடையாக அளிக்க அண்மையில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த கிரீடத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையின் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கிரீடத்தை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,
திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்தை தவிடு பொடியாக்கி, இந்து சமய அறநிலையத் துறையின் பணியை மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்த கருத்துகளை சொல்பவர் யார் என்று பார்க்காமல், கருத்தை மட்டும் பார்த்து அதுகுறித்து ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம். அருங்காட்சியகத்தில் சிலைகள் இருப்பது குறித்து உரிய தகவல் கொடுத்தால், அவற்றை மீட்டு கோவில்களுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
"இந்துசமய அறநிலையத் துறையின் குழுவில் கரை வேட்டிகளுக்கு என்ன வேலை" என எச். ராஜா பேசியது குறித்த கேள்விக்கு, சிலர் அரசியல் தளத்திலே தங்களுக்கு ஏதாவது விலாசம் வேண்டும் என்பதற்காக எதை எதையோ பேசிக் கொண்டு இருப்பதற்கெல்லாம் எங்களுடைய காலத்தையும் நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை' என்றார்.