அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் விஜய நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள கே.டி ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 17 அன்று உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் ஒரு மனு முன் ஜாமின் கோரியும் அந்த மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரி மற்றொரு மனு போட்டு இருக்கிறார்.
ஆனால் இந்த மனு தற்போது வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றம் குளிர்கால விடுமுறையில் இருப்பதால் ராஜேந்திர பாலாஜி மனு (வரிசையில் இருக்கிறது ஆனால் நம்பர் ஆகவில்லை). என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 25ம்தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கழிந்து உச்ச நீதிமன்றம் 2 ம்தேதிதான் திறக்கப்படுகிறது.
அவசர வழக்காக எடுக்க வாய்ப்பில்லை என்பதால் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதற்குள் அவரை பிடிக்க விருதுநகர் போலிசார் முனைப்பு காட்டி வருகின்றனர். அவரை கைது செய்ய விருதுநகர் எஸ்.பி.மனோகர் 9 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படைகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், போலிஸார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விக்ரமின் சாமி படத்தில் வரும் வில்லனை போன்று வெவ்வேறு கார்களில் மாறி மாறி தப்பித்து வருகிறார் ராஜேந்திர பாலாஜி. இன்னும் ஒரு படி மேல் சென்று வெவ்வேறு கெட் அப்-ல் ராஜேந்திர பாலாஜி வலம் வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் போலிஸாரும் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருக்கும் 600 பேரின் செல்போன் எண்களை ட்ராக் செய்து அவரை பிடிப்பதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.