நீதித்துறையின் சுயேச்சையான செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாறுதலை ரத்து செய்க எனக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சஞ்சீப் பானர்ஜி மேகாலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. குறுகிய காலத்திலேயே இடமாற்றம் செய்வது, இந்தியாவில் பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து சிறிய நீதிமன்றமான மேகாலாயாவிற்கு மாற்றுவது, வெளிப்படையான எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாதது ஆகிய காரணங்களால் இது தவறான முடிவாகவே தோன்றுகிறது.
இதற்கு முன்பும் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி அவர்கள் இதே போன்று மேகாலாயாவிற்கு மாற்றப்பட்டதும், அதன் பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்ததும் நடந்துள்ளது. இதேபோன்று, வேறு சில நீதிபதிகளுக்கும் நடந்துள்ளது. எனவே தான் நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக அல்லாமல் நீதித்துறையை அச்சுறுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான ஒன்றிய பாஜக அரசின் தலையீடாகவே பார்க்கப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் பார் கவுன்சிலும் அரசியல் கடந்து அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் பலரும் இந்த மாறுதலை ரத்து செய்ய வேண்டுமென்றும் அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவே தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர்.
எனவே, நீதித்துறையில் தலையீடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவே நீடிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.