வெற்றி எட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே!’. என வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என எல்லாத் திக்குகளிலும் தி.மு.க அணி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றிடம் என எண்ணி, புற்றீசலாய்ப் புறப்பட்டவர்கள், விளக்கோடு மோதிய விட்டிலாய் பொசுங்கிச் சுருங்கி வீழ்கின்றனர்!
தி.மு.கழகம் எனும் வாராது வந்த மாமணியை அழித்தொழித்தால்தான் தங்களுக்கு வாழ்வு என்று செயல்பட்ட அகில இந்தியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இணைந்து நடத்திய பல அடக்குமுறைத் தாக்குதல்களையும், அதற்காக வகுத்த வியூகங்கள் அத்தனையையும் உடைத்தெறிந்து கழகம் பீடுநடை போடுகிறது என்றால், அதற்கான ஒரே காரணம் அதன் இலட்சிய வேட்கைதான்!
தி.மு.கழகம் சந்தித்த வெற்றிகளைப்போல் வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்க முடியாது; தோல்விகளையும் வேறு யாரும் பார்த்திருக்க முடியாது எனும்படி தமிழகத்தில் எந்த இயக்கமும் இதுவரை, ஏன் இனியும் எட்டமுடியாத வெற்றிகளைக் குவித்துள்ளது தி.மு.கழகம்! அதே நேரத்தில் அடிபாதாளத்துக்குத் தள்ளிய தோல்விகளையும் சந்தித்துள்ளது!
அத்தகைய வெற்றி, தோல்விகள் எந்த ஒரு கட்டத்திலும் அதன் உயிரோட்டத்தைச் சிதைத்ததில்லை; துரோகங்கள் இந்த இயக்கத்தைத் துளைத்த போதும், எதிரிகள் எக்காளமிட்டபோதும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாது, பேரறிஞர் அண்ணா ஏற்றிக் கொடுத்த தீபத்தை அருந்தலைவர் கலைஞர் அணையாது காத்துவந்தார்; சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையிலும், சுழன்று சுழன்று சூழ்ச்சிக்காரர்களோடு போராடி அதனைக் காத்தார். அவரைத் தொடர்ந்து, தளபதி அந்தத் தீபத்தைக் கையில் ஏந்தி தமிழ் மக்கள், தமிழ் மண்ணுக்கு ஒளியேற்றிட, அதனை அணையாது காப்பாற்றி வருகிறார்.
தளபதி ஸ்டாலின் கையிலேந்திய அந்தத் தீபத்திற்கு நாளும் நாளும்சுடரேற்றி வருகிறார். அவர் அந்தத் தீபத்தை கரத்தில் ஏந்தியதிலிருந்து இந்த இயக்கத்திற்கு தொடர் வெற்றிகள்தான்! அவர் பொறுப்பேற்று நடத்திய நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த கட்சிகளின் கூட்டணியை எதிர்கொண்டு மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தார்.
39 இடங்களில் 38 இடங்களை கழக அணி பெற்றது! தளபதியின் ஆற்றல் கண்டும் அவர் அறுவடை செய்த வெற்றியைக் கண்டும் தமிழகம் மட்டுமின்றி அகில இந்தியாவே அவரை அண்ணாந்து பார்க்கத் தொடங்கியது. அவரை எலியென நினைத்த கூட்டம் அவரது புலிப் பாய்ச்சல் கண்டு பீதியில் நடுங்கத் தொடங்கியது!
அடுத்து சட்டமன்றத் தேர்தல்! அதிலும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளின் கூட்டணி. அத்தோடு பகுதி பகுதியாக செல்வாக்குடைய சில கட்சிகள், அத்தோடுவிடாது, மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றவற்றோடு கூட்டணி சேர்ந்து களம் இறங்கிய ஒரு மாபெரும் கூட்டணியை, ஒத்த கருத்துடைய கட்சிகளின் துணையோடு சந்தித்தது தி.மு.க.
பண பலம், அதிகார பலம் இவற்றை பத்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை இழந்த கட்சியால் எதிர்கொள்ள முடியுமா? மத்திய - மாநிலத்தை ஆளும் இரண்டு கட்சிகள் மட்டுமின்றி, சாதிச் செல்வாக்குடைய கட்சிகளோடு இணைந்து நிற்கும் கூட்டணியை எதிர்த்து நின்று வெல்ல முடியுமா? - என இறுமாந்திருந்த கூட்டணியை, தலைவர் தளபதி ஸ்டாலின் வகுத்த கூட்டணி வியூகமும், ஓய்வறியா உழைப்பும் வென்று காட்டியது மட்டுமின்றி; பத்தாண்டுகளுக்குப் பிறகு கழகத்தை ஆட்சி பீடமேற்றியது!
முதலில் அலட்சியமாக தளபதியைப் பார்த்த கூட்டம், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அண்ணாந்து பார்த்தது; சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிசயமாகப் பார்க்கத் தொடங்கியது. இயக்கத்தின் இளம் தொண்டனாக, ஆர்வமிகு அரசியல்வாதியாக, ஓய்வின்றி உழைக்கும் செயல்வீரனாக, உழைத்து உழைத்து முன்னேறிய தளபதி இன்றைய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் எதிரிகள் முன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக விசுவரூபம் எடுத்துள்ளார்!
நடந்து முடிந்துள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்; பலருக்கு எதிர்பாராத முடிவுகளாகத் தோன்றலாம்; ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த முடிவுகள்! எதிர்பார்த்த முடிவுகள் மட்டுமல்ல; அவர்கள் முடிவு கட்ட நினைத்த பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதிய முடிவுகள்! பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்கள் என்றால் அதிகார அத்துமீறல்கள் எல்லை மீறியதாக எதிர்க்கட்சிகள் புலம்புவது இயற்கை; அப்படிப்பட்ட புகார்கள் எதற்கும் இடம் தராது நேர்மையாக நடந்தேறிய தேர்தல் என அத்தனை கட்சிகளும் ஏற்றுக் கொண்டு நடந்து முடிந்த தேர்தல் இது!
தேர்தல் களங்களுக்கு, கழகத் தலைவர் முதலமைச்சர் செல்லவில்லை; ஆனால், அவரது 5 மாத கால ஆட்சி சாதனைகள் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு வாக்காளராகச் சென்று சந்தித்தன; தேர்தலுக்கு முன்பும் சரி; நடைபெற்ற நாளிலும் சரி; நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, ‘அதிகார துஷ்பிரயோகம்; அத்துமீறி நடந்ததாக எழும் வாடிக்கைக் குரல்கள்’ பெரிதாக எழவில்லை!
வன்முறைகளால் வாக்குச்சீட்டுகள் அபகரிக்கப்பட்டதாக எழும் குரல்கள்எங்கும் எழவில்லை! ஓரிரு சிறு அசம்பாவிதங்கள் நடைபெற்ற நேரத்தில் அவைகளையும் சீர் செய்து நடந்த தேர்தல்!இப்படி ஏடுகள் மட்டுமின்றி, நடுநிலை நோக்கர்களும் புகழ்ந்து பாராட்டிய விதத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள், தமிழகத்துக்கு கழகத் தலைவர் தளபதி குறித்தும் - அவர் தலைமை ஏற்று நடத்திடும் ஆட்சி பற்றியும், அவரது கரம் கோத்து நடக்கும் கட்சி குறித்தும் தெரிவித்திடும் செய்தி இதுதான்!
நல்லாட்சி நடக்குது; நாமிருக்கும் நாட்டினிலே; பொல்லாத பேர்வழிகளின் புனைசுருட்டுகளைப் புறந்தள்ளுவோம்; எந்நாளும் இந்த ஆட்சி தொடரட்டும்! பொன்னான தமிழகம் பொலிவு பெற்று மிளிரட்டும்! வெற்றிபெற்று பல்வேறு பொறுப்புகளை ஏற்க இருக்கும் கழகக் கண்மணிகளுக்கு ஒரு வேண்டுகோள்! மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில் உங்கள் பதவிகளைப் பயன்படுத்துங்கள்!
நமது இன்றைய தலைவர் சென்னை மாநகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நமது நெஞ்சம் நிறை தலைவர் கலைஞர் தளபதியிடம் கூறினார், “நீ ஏற்றிருப்பது பதவி அல்ல; பொறுப்பு” என்று! அதை புதிய பொறுப்பேற்கும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் உணர்ந்து செயல்படுங்கள்!
கழகத்தில் இன்றைய தலைவர் தளபதி முதல்வராகப் பொறுப்பேற்று - தான் ஆற்றிய அரும் பணிகளின்விளைவு, உங்களுக்கு உயர் பதவிகள் கிடைத்துள்ளன! இந்தப் பொறுப்புகளை ஏற்று நீங்கள் ஆற்றிடும் பணிகள் மூலம் மக்கள் மனதை ஆட்கொள்ளுங்கள்! உங்கள் அரும்பணிகளால், கழக ஆட்சி இனி தொய்வின்றித் தொடர வழிவகுத்திடுங்கள். மலரட்டும் அண்ணா - கலைஞர் கண்ட கனவுகள்; மிளிரட்டும் ஒளியுமிழ் தமிழகம்!
- சிலந்தி
நன்றி - முரசொலி நாளேடு