தொடர்ந்து நான்கு மாநில பா.ஜ.க முதல்வர்கள் ராஜினாமா என்பது பா.ஜ.கவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதையே எடுத்து காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோட்டுக்கு வருகை தந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.
மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாரதியின் திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசியதாவது,
பா.ஜ.க ஆளும் நான்கு மாநில முதல்வர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது பா.ஜ.க வின் செல்வாக்கு சரிந்து வருவதை எடுத்து காட்டுகிறது.
மூன்று வேளாண் சட்டத்தினை திரும்ப பெற வேண்டும், மின்சார திருத்த சட்டம் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து யாரும் போராடவில்லை என பா.ஜ.க தலைவர்கள் போல் இன்று வரை யாரும் பொய் பேசியது இல்லை. ஆளுநராக யார் வந்தாலும் மோடியின் ஏஜென்ட்கள் என்பதால் அவர்கள் ஏஜென்ட் வேலையை செய்வார்கள். பா.ஜ.க ஆளாத மாநிலத்தில் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே ஆளுநரை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.
ஒன்றிய அரசு எதை விரும்புகிறதோ, எதை செய்ய சொல்கிறதோ அதை நிறைவேற்றக்கூடியவர்தான் ஆளுநர் என்றார்.
தொடர்ந்து பேசிய முத்தரசன், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது எனக் கூறியுள்ளார்.