அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
மேலும், அ.தி.மு.க ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று புகார் அளித்தார்.
இந்நிலையில், கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் இன்று காலை 6 மணி முதல் சுமார் 9 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள் கொரோனா விதிமுறைகளை மீறி அலைமோதினர். மேலும் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் கூச்சலிட்டபடி குவிந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் அவர்களை களைந்து செல்லவிடாதபடி அதிமுக நிர்வாகிகள் உணவு பார்சல்களையும் விநியோகித்து வருகிறார்கள்.
அதன்படி காலை இட்லி, வெண் பொங்கல், தோசை, உப்புமாவும் மதியம் எலுமிச்சை சாதம், வெஜ் பிரியாணியும் அதிமுகவினர் வழங்கியிருக்கிறார்கள். இதுபோக எனர்ஜியாக இருப்பதற்காக அவ்வப்போது ரோஸ் மில்க்கும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்த பத்திரிகையாளர்களிடமும் அதிமுகவினர் சண்டையிட்டிருக்கிறார்கள்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அரசு பணியாளர்கள் தங்கள் பணியை செய்வதில் இருந்து தடுத்து வேலுமணியையும் அவரது கூட்டாளிகளையும் காப்பாற்றும் விதமாகவே இந்த கேலிக் கூத்துகள் நடக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.