தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி, நியமிக்கப்பட்டதும் சிலரது அடிவயிறு பற்றி எரிகிறது. பெண்களை இழிவுபடுத்தி பேசியவருக்கு முக்கிய பதவியா? என்று ஆ‘வேச’க் குரல் எழுப்புகின்றனர். கொஞ்ச காலமாக ‘பொத்தி’க்கொண்டிருந்த ‘தினமலர்’ ஏடு அதன் வழக்கமான ‘நரிக்குணத்தை’க் காட்டிடும் போக்கில் ‘வாலை’ நுழைத்துப் பார்க்கிறது!
பெண்கள் குறித்து நகைச்சுவை உணர்வோடு லியோனி கூறிய கருத்தை தேர்தல் நேரத்தில் பூதாகரமாக்கி எதிர்க்கட்சியினர் தங்களது திசைதிருப்பும் அரசியல் ஆட்டத்தை ஆடத் துவங்கியதும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கழகத் தலைவர் தளபதி விளக்கமளித்து - இத்தகைய பேச்சுக்களை தவிர்க்குமாறு கழகச் சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முடிந்துபோன ஒரு விவகாரத்தை இப்போது தேடிப்பிடித்து அவதூறுப் பரப்பத் தொடங்கியுள்ளனர்! ‘பாடநூல் நிறுவனத்தில் மதிப்புமிகு பதவி லியோனிக்கா’ எனக் கேள்விக்குறி போட்டுள்ளனர்! வாயைத் திறந்தாலே ‘அன்றும் இன்றும் என்றும்’ வண்டை வண்டையாக சாக்கடை கழிவு நீர்போல சொற்களை பீய்ச்சிடும் வளர்மதி போன்றவர்கள் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டபோது ‘தினமலர் ’ கூட்டம் எங்கே தேட்டை போடப் போயிருந்தது என்று தெரியவில்லை.
இப்போது பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லியோனி ஆசிரியராக பணியாற்றியவர்; நாடறிந்த பட்டிமன்ற நடுவர்; பேச்சாளர்! அவருக்கென தமிழ்நாட்டில் மட்டுமல்ல; கடல் கடந்தும் பல நாடுகளில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது! புதிய பொறுப்பை அறிவித்ததும் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி அவரது தெளிவுமிகு பார்வையை நாட்டுக்குச் சுட்டிக்காட்டியது!
தமிழினத் தலைவர் கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை அடிப்படையாகக் கொண்டு பாட நூல்கள் தயாரிப்புகள் இருக்கும் எனக் குறிப்பிட்டதும், செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘ஒன்றியம்’ எனும் சொல் பாடப் புத்தகங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்ற பதிலும் - தினமலர் கூட்டத்திற்கு வேம்பாக கசப்பது புதிதல்லவே! ‘துக்ளக்’ ஏட்டின் ஆசிரியர் குருமூர்த்தி இந்தியப் பெண்கள் பற்றி பேசியதை விட வேறு யாரும் தரக்குறைவாக பேசி விட முடியாது!
சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்று நடத்திய விழா ஒன்றில் அப்போதைய ஆர்.பி.ஐ. இயக்குநர்களில் ஒருவராக இருந்த எஸ்.குருமூர்த்தி (துக்ளக் இதழின் இன்றைய ஆசிரியர்) “பெண்கள் முன்புபோல இப்போது இல்லை, அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்மை இல்லாத பெண்கள் அதிகம் ஆகிவிட்டனர்.
இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர்” எனப் பேசிய போது இந்த தினமலர் கூட்டம், “ஆகா.. பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய ஒருவர் ‘ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா’ இயக்குனராக இருப்பதா?” என்று கூக்குரலிடவில்லை. முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அதனைச் செய்தியாக வெளியிட்டு, கூப்பாடு போடவில்லை!
குருமூர்த்தியைப் போல லியோனி பெண் சமுதாயத்தையே கொச்சைப்படுத்திப் பேசவில்லை! ஆனால் அன்று குருமூர்த்தி பேசியதை ரசித்து ‘சிலாகித்த’ கூட்டம்தான் இப்போது லியோனி மீது பாய்ச்சல் நடத்துகிறது! காரணம் புரிகிறதா? குருமூர்த்தியின் உடலில் அலங்கரிக்கும் சில ‘வஸ்துகள்’, லியோனி போன்றவர்களின் உடலை அலங்கரிக்காததின் விளைவுதான் - தினமலரின் எரிச்சலுக்குக் காரணம்! என்னதான் சில பிராணிகளை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது அதன் குணத்தைக் காட்டத்தான் செய்யும் என்பார்கள்; தினமலர் நிலையும் அதுதான்!