‘கலக்குற... சந்துரு’ - ஒரு விளம்பரத்தில் வரும் இந்த வார்த்தைப் பிரயோகம் தமிழக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிடும் பணி குறித்து - ‘கலக்குறார் உதயநிதி’ - என்ற இதய ஒலி கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்கள் மத்தியிலும் ஒலிக்கிறது!
‘வாரிசு அரசியல்’ பேசிய வாய்களுக்கெல்லாம் தனது பணி மூலம் ‘ஆப்பு’ வைத்து விட்டார் உதயநிதி! தொகுதி மக்கள், அவர் ஆற்றிடும் பணி கண்டு பாராட்டிப்பேசும் வார்த்தைகள், அவர்கள் நெகிழ்ச்சியின் வெளிப்பாடு!
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு ஆற்றிட வேண்டிய கடமைகளாக மட்டும் தனது பணியைக் கருதாமல், ஒரு பொறுப்புள்ள மகன் தனது தாய் - தந்தை - சகோதர சகோதரிகளுக்கு ஆற்றிடும் பணிபோல தனது தொகுதி மக்களுக்கு இந்தக் கொரோனா காலத்தில் பணிபுரிந்து வருகிறார்!
தொகுதிக்குள் குறைகேட்கச் செல்லும் போது ஒரு மாடியிலிருந்து சகோதரி ஒருவர், ‘உதய் அண்ணா’ - என அழைக்க, அவரிடம் சென்று குறை கேட்கிறார்!
தான் குடி இருக்கும் பகுதியின் அவலத்தையும் - தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள் - வழிந்தோடிடும் சாக்கடை எனச் சுகாதாரச் சீர்கேட்டோடு அந்தப் பகுதி விளங்குவதிலிருந்து, தங்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும் என்கிறார்! மறுநாள் காலையே பணி தொடங்குகிறது. குப்பைகள் அகற்றப்படுகின்றன. சாக்கடை வெளியேறி வீதிக்கு வராது தடுக்க புதிய குழாய் பதிக்கப்படுகிறது. தெருவே புதுக்கோலம் காணுகிறது!
உதய் அண்ணாவை அழைத்து குறை கூறிய சகோதரி, தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்; இது என்ன கனவா? அல்லது நேரில் காணும் காட்சியா? என்று புரியாது சிலிர்க்கிறார்! ‘நான் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த சினிமாக்களில்தான் இதுபோன்ற காட்சிகளைக் கண்டுள்ளேன்! இங்கே நிஜமாகவே நடக்கிறதே’ என்று, வருவோர் - போவோரிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி பூரிக்கிறார்!
அவருக்கு எல்லாமே அலாவுதீன் பூதம் நடத்திடும் அற்புதங்கள் போல காட்சியளிக்கின்றன! இது ஒரு பக்கம் என்றால்; மற்றொரு பக்கம் சில சகோதரிகள், “நேற்று எங்கள் எம்.எல்.ஏ குறைகேட்டு வந்தார்... பாழடைந்த நிலையில் எங்கள் பகுதி கழிவறைகள் இருப்பதையும் - அதிலே வீசும் துர்நாற்றம் தாங்க முடியாததுமட்டுமல்ல; பலவித வியாதிகளுக்குப் பிறப்பிடமாக உள்ளதையும் எடுத்துக் கூறினோம்.
நேரே அதனுள் சென்று பார்வையிட்டார்... நாங்களே அதனுள் போக அஞ்சுவோம்; அவர் நேரடியாக உள்ளே சென்று பார்வையிட்டார். மறுநாளே சீர் செய்யும் பணி துவக்கப்பட்டு விட்டது!” என்று உருகுகிறார்கள், அந்த அன்புச் சகோதரிகள் !
இப்படி தொகுதியைச் சீர்திருத்தும் பணிகள் ஒருபுறமென்றால், மறுபுறம் தனது தொகுதி மக்களை கொரோனா கொடுந்தொற்று கொத்திக் கொண்டு போகாமலிருக்க, அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாகவே நடத்துகிறார் உதயநிதி !
பலர் தடுப்பூசி போடத் தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட அது குறித்துக் கவலைப்படாத போது, வீடுவீடாகச் சென்று, எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கூறி அழைத்து வரச் செய்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செய்கிறார்!
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அரிசி, மாவு, எண்ணெய் என்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, ஊசி போடத் தயங்கிடும் மக்களையும் ஈர்க்கிறார். காட்சிக்கு எளியவராய் - கடும் சொல் அற்றவராய் - சிரித்த முகத்தோடு - வாஞ்சை கொஞ்சிட அவர் நடந்திடும் பாங்கு கண்டு சிலிர்த்திடும் கழகத் தோழர்கள், உதயநிதியின் எளிமை கண்டு பூரிக்கின்றனர். அரவணைப்பு கண்டு ஆனந்தம் கொள்கின்றனர். உழைப்பு கண்டு தாங்களும் உத்வேகம் கொள்கின்றனர்!
அவருக்கு வாக்களிக்காத மக்கள், தாங்கள் தவறு செய்து விட்டது கண்டு வெட்கி நிற்கிறார்கள். அந்த அளவுக்கு உதயநிதியின் ஒவ்வொரு பணியிலும், ‘தம்பி மக்களிடம் செல்.... அவர்களுடன் இணைந்து இருந்திடு அவர்களை நேசித்திடு அவர்களிடம் அன்பு காட்டு அவர்களுக்காகப் பணியாற்று!’ - என்ற அண்ணாவின் அன்புக் கட்டளை பளிச்சிடுகிறது!
தொய்வின்றித் தொடர்ந்திடும் உதயநிதியின் பணியால் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி மக்கள் சிலிர்த்து நிற்கின்றனர். ‘இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்’ - என எண்ணி இறும்பூதெய்துகின்றனர். ‘கலைஞர்’ எனும் துவளாத்தொண்டின் மற்றொரு வாரிசாக மக்களின் ஏகோபித்த வாழ்த்தோடு உதயநிதி வலம் வரத் தொடங்கியுள்ளார்! தொடரட்டும் அவரது தொண்டு!