அரசியல்

“இந்த சோதனை எங்கள் தலைவரின் செல்வாக்கையே உயர்த்தும்” - மோடி அரசுக்கு நன்றி கூறிய ஆர்.எஸ்.பாரதி! 

“இந்த சோதனை எங்கள் தலைவரின் செல்வாக்கையே  உயர்த்தும்” - மோடி அரசுக்கு நன்றி கூறிய ஆர்.எஸ்.பாரதி! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில், தி.மு.க. தலைமயிலான கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என தேசிய முதல் அனைத்து ஊடகங்கள் நிறுவனங்களின் முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அதில் அதிமுக சொற்ப இடங்களிலும் பாஜகவுக்கு ஒரு இடங்களும் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் திமுக ஆட்சியே வரவேண்டும் என எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கையில், எப்படியாவது தமிழகத்தில் ஒரு இடத்தையாவது பிடித்திட வேண்டும் என கங்கனம் கட்டி பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது மத்திய மோடி அரசு.

அவ்வகையில், திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்துக்கொள்ளாத பாஜக வருமான வரித்துறையை ஏவி திமுகவினரை அச்சமடைய வைத்துவிடலாம் என எண்ணி செயல்பட்டி வருகிறது.

அதன்படி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் மற்றும் மருமகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு திமுக மூத்த நிர்வாகிகளும், கூட்டணி கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காழ்ப்புணர்ச்சியில் உள்ள பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கு மக்களிடையே பெருகி வரும் பேராதரவை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சராக வேண்டும் என்ற மக்களின் மனநிலையை உளவுத்துறை மூலம் அறிந்துக்கொண்ட மோடி அரசு திட்டமிட்டு திமுகவுக்கு குடச்சல் கொடுக்க வேண்டும் என்றே இந்த சோதனையை நடத்தியிருக்கிறது.

இந்த பூச்சாண்டிகள் ஏதும் தமிழக மக்கள் மனநிலையை மாற்ற உதவாது. அதுமட்டுல்லாமல் இந்த சோதனைகளின் மூலம் தி.மு.கவு மீது மக்களுக்கு இருக்கும் ஆதரவு மேன்மேலும் பெருகிக்கொண்டேதான் போகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

2016ம் ஆண்டு தேர்தலின் போது 570 கோடி ரூபாய் பணத்தை கண்டெய்னர் லாரியில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மத்தியில் இருக்கும் பாஜக அரசு இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்தது?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பிடிபட்ட 89 கோடி ரூபாய் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ் முதல் அமைச்சர்களின் பெயர்களும் அடிபட்டதே இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

இப்படி பல்வேறு கேள்விகளை திமுகவினர் இடங்களில் நடக்கும் சோதனையின் மூலம் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆகவே மக்கள் மிகவும் விழிப்புடனேயே இருக்கிறார்கள்.

இப்படியான சோதனைகளை நடத்தி அவர்களின் எண்ணங்களை திசைத்திருப்பி வாக்குகளை பெற்றுவிடலாம் என மத்திய பாஜக அரசும் அதிமுகவும் தப்புக்கணக்கு போட்டுவிட முடியாது.

சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் குறித்து ஒரு குற்றச்சாட்டுகள் கூட எழவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்சியில் உள்ள முதலமைச்சர் முதல் அனைத்து அதிமுக அமைச்சர்கள் மீதும் அவர்களது கூட்டணியினரே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது மவுனம் காத்தது இந்த பாஜக அரசு.

இப்போது தேர்தலுக்கு வெறும் 4 நாட்கள் இருக்கும் வேளையில் திமுகவினர் மீதான சோதனையை கண்டு மக்கள் சிரிக்கத் தான் செய்வார்கள். இருப்பினும் மத்திய அரசுக்கு இந்த வருமான வரி சோதனையின் மூலம் நன்றியே தெரிவிக்க விரும்புகிறோம்.

ஏனெனில் இதனால் திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் செல்வாக்கு 10 மடங்கு உயர்த்தும். எங்கள் மீது எவ்வளவு சோதனைகளை தொடுத்தாலும் நாங்கள் கடுகளவுகூட வருத்தம் கொள்ளப் போவதில்லை.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories