அரசியல்

10 ஆண்டுகளாக அ.தி.மு.க.. 4 ஆண்டுகளாக எடப்பாடி: ஊழலில் ஊறிய பழனிசாமி மூளைக்கு இப்போதுதான் அறிவு வந்ததா?

இதயத் தலைவர் தளபதி உயர்கிறார், உயர்கிறார் உயர்ந்து கொண்டேயிருக்கிறார் என புகழ்ந்து முரசொலியில் சிலந்தி கட்டுரை வெளியாகியுள்ளது.

10 ஆண்டுகளாக அ.தி.மு.க.. 4 ஆண்டுகளாக எடப்பாடி: ஊழலில் ஊறிய பழனிசாமி மூளைக்கு இப்போதுதான் அறிவு வந்ததா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயர்கிறார்... உயர்கிறார்... உயர்ந்து கொண்டேயிருக்கிறார்!

கடந்த ஓராண்டாக கழகத் தலைவர் தளபதி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கழகத்தை வெற்றி முகட்டின் அருகில் இட்டுச் சென்றுள்ளது! ‘முடியுமா?’... என்றனர்; முடித்துக் காட்டுகிறார். ‘நடக்குமா’ என எண்ணினர்; நடத்திக் காட்டுகிறார்!

நம்பிக்கைகளை நாளும் கழகத் தோழர்களிடமும் பொதுமக்களிடமும் விதைக்கிறார்; நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்தக் கருத்துடைய இயக்கங்களை ஒன்றிணைத்து படை நடத்தினார்; அந்த இயக்கங்களின் தலைவர்களுக்குத் தலைவராக அல்ல; அவர்களில் ஒருவராக அரவணைத்துச் சென்றார்! தட்ப வெட்பங்கள் சாதகமாக உள்ள சூழலில் தலைமை ஏற்று நடத்துவதைவிட, அறைகூவல்களையும் ஆர்ப்பரிக்கும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும்போதுதான் ஒரு தலைவனை சரியாக எடைபோட முடியும்! அப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் தனது அசைவுகள் அனைத்தையும் வெற்றி முகட்டை நோக்கி நகர்த்தினார் தளபதி!

பெரியாரின் துணிவு, பேரறிஞர் அண்ணாவின் தெளிவு, பேரெதிர்ப்புக்கு அஞ்சாத கலைஞரின் உறுதி. இவைகளின் சங்கமமாக இயங்குகிறார் இன்றைய தலைவர் தளபதி! நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்உருவான கூட்டணியோடு கட்டுக் கோப்பாக ஒற்றை இலக்கோடு களத்தில் இறங்கியதோடு மட்டுமின்றி வெற்றிகளைக் குவித்திட உறுதுணையாக செயல்பட்டார். இந்தக் கூட்டணி; வெற்றிக் கூட்டணி, மதவாதமும், சர்வாதிகார மமதையும் கொண்ட பாசிச போக்கு வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும் என்ற நேர்கோட்டில் பயணிக்கும் கூட்டணி! இந்தக் கூட்டணியை முறித்திடத்தான் சமீபத்தில் எத்தனை எத்தனை முயற்சிகள்!

கழகக் கூட்டணியை பிளவுபடுத்த தாங்கள் கற்ற வித்தைகளை எல்லாம் காட்டிப் பார்த்தனர். விலைபோன சில ஊடகங்களைப் பயன்படுத்தி உள்ளறுப்பு வேலைகளைச் செய்தனர். கூட்டணிக் கட்சிகளுக்கும் தி.மு.க.வுக்குமிடையே சிண்டு முடியும் முயற்சியில் ஈடுபட்டனர்! எல்லாவற்றையும் சாதுர்யமாக எதிர் கொண்டு, வெற்றிக் கூட்டணியை சிறு சிதறலின்றி மேலும் சில சேர்ப்புகளோடு வலுவேற்றி உருவாக்கி விட்டார்! எண்ணிக்கை பங்கீட்டால் கூட்டணி சிதறுண்டு போகும் என எண்ணியோர் எண்ணம் சுக்கு நூறாகியது. ஏட்டில் எழுதப்பட்ட வெற்றி... இப்போது கல்லில் செதுக்கப்பட்ட வெற்றியாகி விட்டது! வெற்றிக் கூட்டணி அமைத்த பெருமிதத்தோடு, திருச்சியில் இலட்சியப் பிரகடனம் வெளியிட மாபெரும் பொதுக்கூட்டம்... குவிந்த கூட்டத்தில் திருச்சி திணறியது; திக்கு முக்காடியது.

கூட்டத்தின் முழு அளவை படம் பிடிக்கவானில் பறந்து படம் பிடிக்கும் ‘காமரா’க்கள் கூட அயர்ந்து விடுமளவு எல்லை இல்லாக் கூட்டம்! இலட்சியப் பிரகடனத்தை தலைவர் அறிவித்தபோது எழுச்சித் தமிழர்கள் கூட்டம் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்று ஆர்ப்பரித்தது! அல்லல்பட்டு ஆற்றாது நாளும் துவண்ட மக்களை அரவணைக்கும் தலைவன் கிடைத்துவிட்ட ஆனந்தம். அங்கே ஆவேச நர்த்தனம் புரிந்தது! ஏழு அறிவிப்புகள்; எதிர்கால தமிழகத்தை ஏற்றத்துக்குக் கொண்டு செல்லும் அறிவிப்புகள்; புதிராகிப் போகிவிட்ட தமிழர் வாழ்வு உதிர்ந்து விடாமல் அதனை நிமிர்ந்து நிற்க வைக்கும் தேனான அறிவிப்புகள்! அறிவிப்புகள் ஏழும் ஒன்றை ஒன்று சார்ந்து பற்றிப் படர்ந்திடும் அறிவிப்புகள்!

சமூக நீதி எனும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டை அஸ்திவாரமாக்கி அதன் மீது அனைத்து மக்களும் அகம் மகிழ உருவாக்கப்பட்ட திட்டங்கள்! ‘இந்தியாவின் சொர்க்கமாகத் தமிழகத்தை ஆக்கவேண்டும்’ என பேரறிஞர் அண்ணா கனவு கண்டார்! உறங்கும் சில மணித்துளிகள் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தன்னிகரற்ற மாநிலமாக தமிழகத்தை தலை நிமிர்த்த, சிந்தித்து செயல்பட்டார் தலைவர் கலைஞர்! தன்மானத் தமிழ் நிலத்தை தலை நிமிர்ந்து நிற்க வைத்தார். "இடையிலே புகுந்த கூட்டம், தங்கள் மடிகளை கனமாக்கிக் கொண்டது" தலைநிமிர்ந்து நின்ற தமிழகத்தை தலைகுனிந்த தமிழகமாக்கியது.

தமிழ் மக்கள் மீது பாசமும், நேசமும் கொண்ட தலைவர்கள் மத்தியிலே வேசத்தலைவர்கள் தோன்றியதின் விளைவு; சீர்குலைந்த தமிழகத்தை மீண்டும் பார்போற்ற வைக்கும் தமிழகமாக்கிட ஏழு திட்டங்களை அறிவித்துள்ளார் தலைவர்! இந்த அறிவிப்புகளால் புளகாங்கிதம் கொண்ட தமிழகம் பூரித்தது; புதியதோர் தமிழகம் புலரப் போகிறது எனும் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்று ஆனந்தக் கூத்தாடியது! ஆளுவோருக்கோ அடிவயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியது; குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கண்டு, அரசியல் ‘குந்தி’களாகி அடிவயிற்றில் அம்மிக் குழவிகளை எடுத்து அடித்துக் கொள்ளத் தொடங்கினர் சிலர்!

தமிழகத்தின் பேச்சுப் பொருளானது அந்த அறிவிப்பு! ஊடகங்களில் விவாதப் பொருளானது! ஒரு ஊடகத்தில் ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் உட்கார்ந்து கொண்டு, ‘இந்த அறிவிப்பு நிறைவேற்ற இயலாத அறிவிப்பு; ஏமாற்று அறிவிப்பு’ என வாய் நீளம் காட்டிக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க.வின் திடீர் அறிவிப்பாக, முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சேர்ந்து செய்தியாளர்களிடம் குடும்பத் தலைவிக்கு ஆயிரத்து ஐநூறு தருவோம் எனக் கூறிய அறிவிப்பு வருகிறது! அது, விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே, முக்கியச் செய்தியாக அதே ஊடகத்தில் வெளியிடப்படுகிறது.

10 ஆண்டுகளாக அ.தி.மு.க.. 4 ஆண்டுகளாக எடப்பாடி: ஊழலில் ஊறிய பழனிசாமி மூளைக்கு இப்போதுதான் அறிவு வந்ததா?

பாவம்; அந்தச் செய்தித் தொடர்பாளர்; அவர் முகத்தில் கிலோ கணக்கில் விளக்கெண்ணெய் குடித்த முகமாற்றம்; விவாதத்தில் பங்கேற்ற மற்றவர்கள் சிரிப்பை அடக்க முடியாது வாயை கையைக் கொண்டு மூடிக்கொண்டதும், சிரிப்பதை வெளியே காட்டுவது பண்பாகாது என தலைகுனிந்து சிரித்த காட்சிகளும்; நடைபெறும் அலங்கோல ஆட்சியின் அவலத்தைத் தோலுரித்தது! ‘நாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க இருந்ததை ஸ்டாலின் தெரிந்து கொண்டு அறிவித்து விட்டார்’ என்கிறார் முதலமைச்சர்! கடந்த பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியும், நான்காண்டு காலமாக பழனிசாமி ஆட்சியும் நடைபெறுகிறது.

இத்தனை நாள் இதனைச் செய்ய வேண்டும் என்று தோன்றாத அளவுக்கு எங்கே பழனிச்சாமியின் மூளை ஊர் மேயப் போயிருந்தது? என்ற கேள்விகள் மக்கள் மனதில் தோன்றாதா என்று கூட சிந்திக்க வக்கற்றுப் புலம்புகிறார் முதலமைச்சர்! ஆட்டம்காணத் தொடங்கி விட்டது அவர்களது நாற்காலிகள்! இனியும் தேட்டை போட இயலாதே என்ற நினைப்புகளால் தூக்கத்தைத் தொலைத்து விட்டு பிதற்றத் தொடங்கிவிட்டனர். ஆம்; அவர்களை பிதற்ற வைத்துவிட்டார் நம் தலைவர்!

மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஈடேற்ற நிமிர்ந்து நின்று போராடுபவன்தான் தலைவன்! ‘அதிகாரங்கள்’ உருவாக்கும் தலைவன் நிலைப்பதில்லை! அரவணைப்புகளால் உருவாகும் தலைவன் மக்கள் உள்ளத்தில் உயர்ந்து நிற்கிறான்! கழகத் தலைவர் திருச்சியிலே உரையாற்றி முடித்த உடன், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், கழகத்தின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், நெகிழ்ந்து கண்கலங்கிய காட்சியும், அனிச்சை செயல்போல அவரை அறியாது ஒலி பெருக்கி முன் விரைந்து சென்று அண்ணாவோடு, கலைஞரோடு ஒன்றிப் பணியாற்றிய நான் இன்று அந்தப் பெருந் தலைவர்கள் உருவில் தளபதியைக் காண்கிறேன் எனப் பெருமிதம் கொண்டதும் உயர்கிறார்; உயர்கிறார்; உயர்ந்து கொண்டேஇருக்கிறார்; நம் இதயத் தலைவர் தளபதி என்பதை தெள்ளத் தெளிவாக்கும் காட்சிகளன்றோ!

banner

Related Stories

Related Stories