அரசியல்

ஊழலின் மொத்த உருவமாக உள்ள பழனிசாமி பொய்யையும் புரட்டுகளையும் மேடைதோறும் உளறுவதா? - பொன்முடி கடும் கண்டனம்

முதலமைச்சர் பழனிசாமிக்கு இன்றுள்ள ஒரே சிந்தனை- பொழுது விடிந்தால் தி.மு.க. மீது என்ன பொய் சொல்வது? அ.தி.மு.க. சாதித்தது என்று எந்த பொய்யைச் சொல்வது என்பது தான்!

ஊழலின் மொத்த உருவமாக உள்ள பழனிசாமி பொய்யையும் புரட்டுகளையும் மேடைதோறும் உளறுவதா? - பொன்முடி கடும் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொழுது விடிந்தால் புதுப் புது பொய்களை அவிழ்த்துவிடும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி

இது தொடர்பான அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்திற்கே சென்று தடை (ஸ்டே) வாங்கிய முதலமைச்சர் பழனிசாமி, “பெங்களூர் வருகையால்” மனக்குழப்பத்திலும், சஞ்சலத்திலும், தடுமாற்றத்திலும், ஏன், என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்திலும் இருப்பது எல்லோர்க்கும் புரிகிறது. அதனால் கூட்டம் தோறும் பிரச்சாரம் என்ற பெயரில், பச்சைப் பொய்களை- கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். அவரது இயலாமையை மறைக்க, எங்கள் கழகத் தலைவர் தளபதியை விவாதத்திற்கு அழைக்கிறார். ஊழல் வழக்கில் ஓடோடிச் சென்று பெற்ற தடையுத்தரவை விலக்கிக் கொண்டு, எங்கு வேண்டுமானாலும் வாருங்கள்; நேருக்கு நேர் பேசுவோம் என்று எங்கள் கழகத் தலைவர் ஏற்கனவே கூறி விட்டார்.

அதன் பிறகு “கப்-சிப்” என்று வாயை மூடிக் கொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி இப்போது மீண்டும், “நேருக்கு நேர் விவாதம்” என்று, குத்துச் சண்டை பயில்வான் போல தொடை தட்டுகிறார். சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி கட்டி வரக்கூடாது என்று தனது கீழ் உள்ள காவல்துறைத் தலைவரிடம் சொல்ல அஞ்சிய பழனிச்சாமி - டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மந்திரிகளை அனுப்பி, புதுவித நிர்வாக நடைமுறையைக் கையாண்டார். அவர்களோ புகாரைக் கொடுத்து விட்டு வெளியில் வந்து பேட்டி கொடுக்கவே ஒருவருக்கு ஒருவர் பயந்து நடுங்கியதை பத்திரிகையாளர்கள் கண்டு ரசித்தார்கள். “பெங்களூர் வருகையால்” மிரண்டு, கட்சியை கட்டிக்காக்க முடியாத பழனிசாமி, இப்போது தனது தோல்வியை மறைக்க, எங்கள் கழகத் தலைவர் உதவிக் கரம் நீட்டுவாரா என்று பார்க்கிறார். திருவாளர் பழனிசாமி அவர்களே, நீங்கள் இன்னும் எங்கள் கழகத் தலைவரின் உயரத்திற்கு வரவில்லை என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதலமைச்சராக உச்ச நீதிமன்ற தடையை விலக்கிக் கொண்டு வாருங்கள் - நாம் இருவரும் நேருக்கு நேர் விவாதிப்போம்!

ஊழலின் மொத்த உருவமாக உள்ள பழனிசாமி பொய்யையும் புரட்டுகளையும் மேடைதோறும் உளறுவதா? - பொன்முடி கடும் கண்டனம்

இது ஒருபுறமிருக்க, இலவச மின்சாரம் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி - அவர்கள் மீது தடியடி நடத்தி கொத்துக் கொத்தாக கைது செய்தது அ.தி.மு.க. ஆட்சி. போராடிய நாராயணசாமி நாயுடு அவர்களின் வரலாறு எல்லாம் நேற்று தவழ்ந்து வந்து முதலமைச்சர் பதவியைப் பிடித்த பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் விவசாயிகள் மீது தி.மு.க. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வழக்கம் போல் - “நான் டெண்டரில் ஊழல் செய்யவில்லை” என்று அப்பட்டமாகப் பொய் கூறுவது போல் ஒரு கோயபல்ஸ் பிரச்சாரத்தைத் துவங்கியிருக்கும் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரியில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற கட்சி அ.தி.மு.க. அந்த கொலை குற்றத்தில் தண்டனை பெற்று, சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்து, மூன்று மாணவிகளின் கொலையை நியாயப்படுத்திய - பெண்ணினத்திற்கே எதிரான கொடூர மனப்பான்மை கொண்டவர் பழனிசாமி. விவசாயிகளுக்காகப் போராடிய பேராசிரியர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குத் தொடுத்து கைது செய்து - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி மகிழ்ந்த “சேடிஸ்ட்” மனப்பான்மை கொண்ட பழனிசாமி தி.மு.க.வை நோக்கி சுண்டு விரலை நீட்டக் கூட தகுதியில்லை; அருகதை இல்லை!

கொரோனாவில் விவசாயிகள் அவதிப்பட்ட போது - விவசாயத் தொழிலாளர் சங்கடத்தை அனுபவித்த போது, 5000 ரூபாய் கொடுக்க மறுத்து - அடாவடியாக என்னிடம் நிதி இல்லை என்று கூறியது நெடுஞ்சாண்கிடையாக சசிகலாவின் காலில் விழுந்து பதவியேற்றுக் கொண்ட பழனிசாமி தானே! விவசாயிகளுக்கு ரூ.7000 கோடிக் கடனை தள்ளுபடி செய்து இந்தியாவிற்கே விவசாயக் கடன் தள்ளுபடிக்கு - ஏன் பழனிசாமிக்கே வழிகாட்டியது தி.மு.க. ஆட்சி; முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி. இலவச மின்சாரத்தை வழங்கி - இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கியது கழக ஆட்சி. ஆனால் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் “உதய்” திட்டத்திற்கு கையெழுத்துப் போட்ட ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லை என்று கைவிரிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு கைதூக்கி - ஆதரவளித்து - வாக்களித்து விட்டு இன்று விவசாயிகள் முன்பு நின்று மனசாட்சியின்றி நாடகமாடுபவர் பழனிசாமி.

இப்போது கூட விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி எங்கள் கழகத் தலைவர் வாக்குறுதியளித்த பிறகு நடந்ததே தவிர - அதற்கு முன்பு வரை கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்ற இரக்கமற்ற இதயத்தின் அடையாளமாக இருக்கும்பழனிசாமி - தி.மு.க. விவசாயிகளுக்காக பாடுபட்டதும் - போராடியதும் - போராடிக் கொண்டிருப்பதும் புரியவில்லை. அது அதிகார போதையா? மமதையா? விவசாயிகளை புரோக்கர்கள் என்று அழைக்கும் ஆணவமா என்று இன்னும் மூன்று மாதங்களில் வெளிச்சத்திற்கு வந்து விடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் இன்றுவரை பழனிசாமி நாடகம் ஆடி வருகிறார். அதுவும் பகல் வேடம் – பச்சைப் பொய் வேடம் போடுகிறார். குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அவர் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வே கூறிய பிறகும் - மத்திய அரசின் சார்பில் அப்படியொரு வாதத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்த பிறகும் எதிர்த்து “முணுமுணுப்பை”க் கூட காட்ட முடியாமல் ஒரு நாள் “பெங்களூர் வருகைக்கே” முடங்கிக் கிடந்த திரு பழனிசாமிக்கு - பேரறிஞர் அண்ணா காலம் முதற்கொண்டு, ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு தெரியாது. ஏனென்றால் அவர் நேற்றுப் பெய்த மழையில் – பதவி சுகத்திற்காக முளைத்த காளாண் மட்டுமல்ல- பச்சோந்தித்தனத்தின் அடையாளம்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் 30 ஆண்டு காலத்திற்கும் மேல் சிறையில் வாடுகிறார்கள். இந்த காலகட்டத்தில் 20 வருடங்கள் ஆட்சியிலிருந்த கட்சி அ.தி.மு.க. ஆனால் இந்த காலகட்டத்தில் 10 வருடங்களே ஆட்சியிலிருந்த தி.மு.க.- இந்த ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்ட 8 வருடத்தில் நளினியின் தூக்குத்தண்டனையை ரத்து செய்தது. அதுவும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே இதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சாதித்துக் காட்டினார். அதையே குறை கூறிய கட்சிதான் அ.தி.மு.க.! ஆனால் 20 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. இந்த ஏழு பேர் விடுதலைக்கு என்ன செய்தது? 2014, 2016, 2019, 2021 என்று தேர்தலுக்குத் தேர்தல் இந்த விடுதலையை வைத்து அரசியல் நடத்தி - தேர்தல் நாடகம் போட்டது அ.தி.மு.க. ஆட்சி! அதிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நிராகரித்து விட்ட பிறகு - அவரைச் சந்தித்து மனுக் கொடுத்து - “ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்” என்று வெளியிலும் - சட்டமன்றத்திலும் சொல்லி - கபட நாடகம் ஆடி - கதை அளந்த ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே பழனிசாமியாகத்தான் இருக்கும்! சட்டமன்றத்தில் பொய் சொன்ன இப்படியொரு முதலமைச்சர் தமிழகத்தில் இருந்ததே இல்லை!

முதலமைச்சர் பழனிசாமிக்கு இன்றுள்ள ஒரே சிந்தனை- பொழுது விடிந்தால் தி.மு.க. மீது என்ன பொய் சொல்வது? அ.தி.மு.க. சாதித்தது என்று எந்த பொய்யைச் சொல்வது என்பது தான்! 10 வருடம் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஆட்சி செய்த அ.தி.மு.க. - இப்போது நான்கு வருடங்களாக வெறும் டெண்டர் கொள்ளை - ஊழல் - கமிஷன் - கரெப்ஷன் – கலெக்ஷனுக்காக ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு விவசாயிகளுக்கு தி.மு.க. செய்த சாதனைகளையோ, செயல்படுத்திய முத்திரை பதிக்கும் திட்டங்களையோ- ஏன் ஈழத் தமிழருக்கும் - பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்காக எங்கள் கழகத் தலைவர் ஆற்றிய பணிகளையோ குறை கூற துளி கூட அருகதை இல்லை. ஆகவே பொய் பேசி - அரசு விளம்பரத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்து - தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம் என திரு. பழனிசாமி நினைத்தார். அது இப்போது “பெங்களூர்” வருகையால் பிசுபிசுத்து விட்டது கண்டு பதறுகிறார்!

ஆகவே, “என்னால் இயலவில்லை. பதவி சுகமும், ஊழலில் மலை போல் குவிந்திருக்கும் கரன்சிகளும் என் கண்களை மறைக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்” என்று கைகூப்பி தமிழக மக்களுக்குச் செய்துள்ள துரோகத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு- ஓய்வு எடுத்துக் கொள்வதற்குப் பதில் தான் ஏதோ தமிழகத்தின் தனிப்பெருந் தலைவர் என்று நினைத்துக் கொண்டு எங்கள் கழகத் தலைவரை விவாதத்திற்கு அழைப்பதோடு- மேடை தோறும் பொய்யும் புரட்டுகளையும் “பிரச்சாரம்” என்ற பெயரில் உளறிக் கொட்டிவருகிறார்! ஊழலின் மொத்த உருவம் “கோயபல்ஸ்” வடிவில் ஊர்வலமாகச் செல்வது தமிழக மக்களுக்கும் நல்லதல்ல- நாட்டிற்கும் ஏற்புடையதல்ல!”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories