கோவில்பட்டியில் நடைபெற்ற ஏ.ஐ.டியு.சி நூற்றாண்டு நிறைவு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு ஏ.ஐ.டி.யுசி கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.நல்லகண்ணு, "சுதந்திர இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவைதான் அரசியலமைப்பின் அடிப்படைத் திட்டம். இந்தத் திட்டத்தை மறுக்கவோ, மாற்றவோ கூடாது.
பா.ஜ.க வேல் யாத்திரை நடத்துவது அவர்களது கொள்கை. ஆனால், மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது. பா.ஜ.கவின் மதவெறி சக்தியையும், பிளவுபடுத்தும் சக்தியையும் முறியடிப்பதே எங்கள் நோக்கம்.
தமிழகத்தில் அ.தி.மு.க அரசுக்கு அரசு கட்டமைப்பு பற்றி கவலையில்லை. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தைப் பற்றி மத்திய பா.ஜ.க அரசு கவலைப்படவில்லை.
அவர்கள் ஆட்சியைப் பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, சட்டம் என்ன இருக்கிறது, அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற கவலை இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.