தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க கூட்டணி குறித்து தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.
மேலும், வரும் காலங்களில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மக்களுக்கு எதிரான பா.ஜ.க ஆட்சியை அ.தி.மு.க ஆதரித்துக்கொண்டிருக்கிறது. தி.மு.கவை பொறுத்தவரையில் இனி பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி குறித்து கூறிய கருத்து அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே மனக்கசப்புகள் இருப்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
எடப்பாடி அரசின் செயல்பாடுகளால் தமிழக மக்கள் அதிக பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். தமிழர்களின் முன்னேற்றம், தமிழர்களின் வேலைவாய்ப்பு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழிலாளர்களின் நலன்கள் என எல்லாவற்றையும் திட்டமிட்டு சீரழித்து மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான விலையை அ.தி.மு.க கொடுக்க வேண்டியிருக்கும்.” எனத் தெரிவித்தார்.