விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை பெரும்பான்மையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய மோடி அரசு நிறைவேற்றியது.
இந்த மசோதாவுக்கு பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.
குறிப்பாக, தமிழக விவசாய நலன்களைப் பற்றி துளியும் கவலைப்பட்டாமல் அ.தி.மு.க வேளாண் மசோதாக்களை ஆதரித்துள்ளதாக அரசியல் கட்சியினர் விமர்த்தி வருகின்றனர். இந்நிலையில், “பதவியைத் தக்கவைக்க மக்களவையில் காலைப்பிடிப்பதும் - மாநிலங்களவையில் கையைப் பிடிப்பதும் தமிழக விவசாயிகளிடம் எடுபடாது என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய அமைச்சராவதற்கு ‘நோட்டாஜி’யின் பார்வை படாதா என காத்திருக்கும் ஜுனியர் தர்மயுத்தம், விவசாய விரோத சட்டங்களை மக்களவையில் ஆதரித்தார். தானும் நேர்மையான அடிமையே என ஜி-யிடம் பெயரெடுக்க அடிமை முதல்வரும் முட்டுக்கொடுத்தார். ஆனால், மாநிலங்களவையில் மட்டும் எதிர்ப்பு நாடகம் எதற்கு?
பதவியைத் தக்கவைக்க மக்களவையில் காலைப்பிடிப்பதும் - மாநிலங்களவையில் கையைப் பிடிப்பதும் தமிழக விவசாயிகளிடம் எடுபடாது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் உங்களுக்கு அடுத்து எதிர்க்கட்சி வரிசை கூட கிடைக்காது, துரோகிகள் வரிசைதான் அடிமைகளே.” எனத் தெரிவித்துள்ளார்.