தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி இரண்டாவது நாளான இன்று நீட் விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுத்தது தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றதும் தி.மு.கதான். 2016ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி ஏற்பட்ட பிறகே நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வு பிரச்னைக்கு தி.மு.கவே காரணம். காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது” என பொய்களையே அழுத்தமாகச் சொன்னார்.
நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிக்காத அ.தி.மு.க அரசால் 13 உயிர்களை தமிழகம் பறிகொடுத்துள்ள நிலையில், தங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டை ஏற்காமல் தி.மு.க-வை குற்றம்சாட்டி தப்பித்துக்கொள்ள நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தி.மு.க அன்றும், இன்றும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது என்பதே உண்மை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது தி.மு.க.
தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றி, 2007-08ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறையைக் கொண்டு வந்தது தி.மு.க.
நுழைவுத் தேர்வு இன்றி, +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை தொடரப்பட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு 2010 ஆகஸ்ட் 15ம் தேதி கடிதம் எழுதினார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தமிழக அரசு இணைத்துக் கொண்டது. தமிழ்நாடு அரசு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு +2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை குறித்து இடைக்கால தடை உத்தரவும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அன்று தி.மு.க அரசால் பெறப்பட்டது.
கடந்த 2012இல் மருத்துவக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாகச் செய்திகள் வந்தபோது, அதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து 2013ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், “ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றுவதற்காகவே நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்தது கழக ஆட்சி. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும் என்பதைதெளிவுபடுத்திட விரும்புகிறேன்” என உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
மேலும், 2016 மே 9ம் தேதி மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தேர்வினை அனைத்து மாநிலங்களிலும் 2016ஆம் ஆண்டு முதல் நடத்தியே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தி.மு.க தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் விடுத்த அறிக்கையில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் அலட்சிய மனப்பான்மையாலும், தி.மு.க ஆட்சியில் 2006ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்த வாதங்களை தமிழக அரசு தரப்பு தெளிவாக எடுத்து வைக்காததாலும் நீட் தேர்வில் இத்தகைய உத்தரவு வந்திருப்பதாக சாடியிருந்தார்.
மேலும், “தி.மு.க பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமானால், 7-3-2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தின் அடிப்படையில், 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையினைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அவசரத்தில் மேற்கொள்ளப்படும்.
தமிழக மாணவர்கள் தொடர்ந்து நுழைவுத் தேர்வு இல்லாமலே, மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் தங்களுடைய உயர் கல்வியைத் தொடருவதற்கு அனைத்து முயற்சிகளையும் திமுக மேற்கொள்ளும்” என்று கலைஞர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க நீட் தேர்வு விவகாரத்தில் கோட்டைவிட்டு இன்று பல மாணவர்களின் உயிர்பலிக்கும் காரணமாகியிருக்கிறது. அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, உரக்கப் பேசுவதன் மூலம் பொய்களை உண்மைகளாக்க முயன்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.