முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, நேற்று முன்தினம் தன்னை பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டார். பா.ஜ.கவின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார் அண்ணாமலை.
தமிழகத்தில் தங்களின் செல்வாக்கைப் பெருக்க பா.ஜ.க பல குறுக்கு வழிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் நீண்டகால திட்டங்களுடன் நிறைவேற்றப்பட்ட ஒன்றே முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையின் இணைவு.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பிரிவைச் சேர்ந்தவர். அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூர் தெற்கு மண்டல துணை போலிஸ் கமிஷனராக பணியாற்றியபோது கடந்த ஆண்டு மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் ஆர்.எஸ்.எஸ் குழுக்களோடு மறைமுகமாகப் பணியாற்றிய அண்ணாமலை சமீபத்தில் ஊடக வெளிச்சத்தில் தென்படத் தொடங்கி, ‘தற்சார்பு’ கோஷமிட்டார். இந்நிலையில்தான் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.
பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கோவையில் நிருபர்களை சந்தித்தபோது, “பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வருகிறது. இதுபோல் தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும். சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். என்றுமே நான் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.” எனப் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்தபிறகு நடைபெற்ற பிரியாவிடைக் கூட்டத்தில், “நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடன். பிறந்தது வேறு இடமாக இருக்கலாம். எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன்” எனப் பேசியது ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
‘கடைசி மூச்சு உள்ளவரை பெருமைமிகு கன்னடன்’ எனக் கூறி ஓராண்டில் தமிழகத்தில் பா.ஜ.க-வில் இணைந்து ‘என்றும் தமிழன்’ என முழங்கியிருக்கிறார் அண்ணாமலை.
இந்த இரு பேச்சுகளையும் குறிப்பிட்டு நேரத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி பேசுவதாக அண்ணாமலையை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.