கருத்து சுதந்திரத்தைப் பறிக்கிற ஜனநாயக விரோதப் போக்கை உடனடியாக தடுத்து நிறுத்துகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகள் ஓரணியில் திரண்டு தீவிரமான முடிவுகளை எடுக்கவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு :
மத்திய பா.ஜ.க ஆட்சியில் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கிற வகையில் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் முன்னணி பங்கு வகிக்கிற NDTV நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவிவிட்டு பல்வேறு வகைகளில் தொல்லைகள் தரப்பட்டு வருகின்றன.
அதேபோல, அன்னை சோனியா காந்தியை இழிவுபடுத்திய அர்னாப் கோஸ்வாமி பாதுகாக்கப்பட்டு வருகிறார். அதேபோல, சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் நாள்தோறும் மிரட்டலுக்கு ஆளாகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்திலும், பா.ஜ.கவின் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர ஆரம்பித்திருக்கின்றன. தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் தங்களது கருத்துகளை வலிமையாக எடுத்துக் கூற முடியாத நிலையில் நிகழ்ச்சியை நடத்துகிற நெறியாளர்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க.வினர் எழுப்பி வருகின்றார்கள்.
ஏதோ ஒரு காரணத்தை கூறி புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று மிரட்டலை பா.ஜ.க. வினர் வெளிப்படுத்தினர். அதற்கு பிறகு சமரசமாகி தற்போது பங்கேற்று வருகின்றனர். தமிழக ஊடகத் துறையினர் இன்று தொழில் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகின்றனர்.
அரசியல் ரீதியாகவும், பல்வேறு தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. நெறியாளர்கள் மீது வெறுப்பையும், விரோத உணர்ச்சியையும் சில சமூக ஊடகங்கள் பரப்பி வருகின்றன. தொலைக்காட்சி ஊடகங்களில் இதைத்தான் பேச வேண்டும், இவரைத்தான் அழைக்க வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சிந்தனை கொண்டவர்கள் மட்டும் தான் ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டுமென்று நிர்பந்திக்கப் படுகிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள்.
என்றும் இல்லாத அளவிற்கு ஊடகங்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது. குறிப்பிட்டு நெறியாளர்களாக இருப்பவர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தனி நபர் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.
சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் 18 தொலைக்காட்சியில் நெறியாளர் பணியை எவ்வித பாரபட்சமின்றி விவாதங்களில் மிகச் சிறப்பாக செய்து வந்த மு.குணசேகரன் அவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் விவாதத்தில் பங்கேற்க முடியாத அளவிற்கு விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரத்திற்கு விரோதமாக பா.ஜ.க-வினரின் மிரட்டலுக்கு நியூஸ் 18 நிர்வாகம் பணிந்து போயிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. ரிலையன்ஸ் அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஊடகங்கள் இருந்தால் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படமுடியாது என்பதற்கு மு.குணசேகரன் பழிவாங்கும் நடவடிக்கை ஓர் உதாரணம்.
இன்றைக்கு நெறியாளர் மு.குணசேகரன் பழிவாங்கப் பட்டிருக்கிறார். அடுத்து யாரை பழிவாங்குவது என்று பா.ஜ.க.வினர் திட்டமிட்டு வருகின்றனர். அனைத்து ஊடகங்களும் அச்சம், பீதியில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இத்தகைய கருத்து சுதந்திரத்தை பறிக்கிற ஜனநாயக விரோதப் போக்கை உடனடியாக தடுத்து நிறுத்துகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகள் ஓரணியில் திரண்டு தீவிரமான முடிவுகளை எடுக்கவேண்டும். எனவே, நியூஸ் 18 தொலைக்காட்சியின் நெறியாளர் மு.குணசேகரன் மற்றும் செய்தி ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.