ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட 3 அறக்கட்டளையிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த மத்திய பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து காட்டமாக விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைவராக இருக்கும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி சாரிடபிள் டிரஸ்ட், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம், வருமானவரிச் சட்டம், அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றை மீறிச் செயல்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவுக்கு அமலாக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மோடி அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையும் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைக்கு மிரளமாட்டார்கள். பீதியடைந்த மோடி அரசு கண்மூடித்தனமான ஆதாரமில்லாத, அபாமாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது.
பா.ஜ.கவின் நாகரிகமற்ற, நயவஞ்சகமான வெறுப்பு ஒவ்வொரு நாளும் வெட்கப்படக்கூடிய வகையில் வெளிப்படுகிறது. மோடி அரசின் வெளிப்படையான தோல்வியை மறைக்க தவறான தகவல்களைப் பரப்புவதிலும், திசை திருப்பும் நடவடிக்கைகளிலும் பா.ஜ.க ஈடுபடுகிறது.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையை பழிவாங்கும் நோக்கில் விசாரணை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துபவர்கள் மோசமாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்து மோடி-ஷா அரசாங்கம் அஞ்சுகிறது.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளால் வழங்கப்படும் மனிதநேயப் பணிகள் மற்றும் மதிப்புமிக்க சேவைகள் எப்போதுமே தனித்து நிற்கும். எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கைகளையும் சந்தித்து நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ராஜீவ் காந்தி அறக்கட்டளையிடம் விசாரணையில் கேட்கப்படும் அதே கேள்விகளை அரசுக்கு நெருக்கமாக இருக்கும் விவேகானந்தா அறக்கட்டளை, பா.ஜ.கவின் வெளிநாடு நண்பர்கள், ஆர்.எஸ்.எஸ் ஆகியோரிடம் கேட்பீர்களா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.