“இன்னும் 11 மாதங்கள்தான். பத்திரிகையாளர்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் அடைக்கப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அடைக்கப்படுவார்” எனத் கே.என்.நேரு எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:, “கோவையில் சசிகலா உறவினர் இராவணனுக்கு” கால் கழுவி, சென்னையில் “சசிகலாவிற்கு சலாம்” போட்டு - அமைச்சர் பதவியை “காக்காய் பிடித்து” வாங்கிக் கொண்டு, இன்றைக்கு உள்ளாட்சித் துறையை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி “குறை குடம் கூத்தாடும்” என்பது போல் ஒரு வெற்று அறிக்கை வெளியிட்டு, எங்கள் கழகத் தலைவரை விமர்சனம் செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சிறைக்குச் செல்லும் நாள் நெருங்கி விட்டது” என்ற பீதியில் “சில்லறைப் புத்தியுடன்” “சிறுமதியுடன்” அறிக்கை என்ற பெயரில் ஒரு “உளறலை” “ போக்கிரித்தனமான எண்ணவோட்டங்களை” வெளியிட்டிருப்பது அவரது அறியாமையைக்காட்டுகிறது. அடிக்கின்ற கொள்ளையில் - கொரோனாவின் தாக்கத்தையே மறந்து விட்டு - பூனை கண்ணை மூடிக் கொண்டது போன்ற மனநிலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் திரு வேலுமணி!
“விபத்தில்” கைப்பற்றிய அ.தி.மு.க.,வை தனது குடும்பக் கம்பெனியாக்கி - அ.தி.மு.க. அலுவலகத்தையும், அதன் பத்திரிகையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேலுமணிக்கு தி.மு.க. பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
அமைச்சர் பதவியை தனது சகோதரரின் கம்பெனிகளுக்கும், தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் “அள்ளிக் கொடுக்கும்” பதவியாக மாற்றி - இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் உள்ள மூத்த “கொள்ளையராக” - முதல் “கொள்ளையராக” வலம் வரும் வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவரின் கொரோனா பேரிடர் காலத்து மக்கள் பணி குறித்துப் பேசிட என்ன அருகதை இருக்கிறது?
வீராப்புப் பேசுவது வீண் வம்பை விலைக்கு வாங்குவதற்கு சமம் என்று வேலுமணியை எச்சரிக்க விரும்புகிறேன். அரசியலில் நேருக்கு நேர் கருத்துச் சொல்லி - ஜனநாயக ரீதியான வாதங்களை எடுத்து வைக்க தகுதியோ, தார்மீக உரிமையோ கொஞ்சம் கூட இல்லாதவர் வேலுமணி.
“பத்திரிகையாளர் அன்பழகன் குண்டர் சட்டத்தில் கைது”, “டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் மற்றும் உதவி ஆசிரியர் மயில்வாகனன் ஆகியோருக்கு மிரட்டல்”, “கோவை சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்தி தளத்தின் நிறுவனர் ஆண்ட்ரூ சாம் ராஜ பாண்டியன் கைது” என்று அடக்குமுறை வெறியாட்டம் போடும் அமைச்சர் வேலுமணி போலீசை துணைக்கு அழைக்கும் ஒரு நிரந்தரமான கோழை!
அப்படிப்பட்ட கோழை, கோட்டையில் அமர வாய்ப்பு கிடைத்து விட்டது என்பதற்காக எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து சுட்டு விரல் நீட்டிப் பேச யோக்கியதை இல்லை; தகுதியும் இல்லை. “கே.சி.பி. எஞ்சினியர்ஸ் லிமிடெட்” "பி.செந்தில் அன்ட் கோ” “வரதன் இன்ஃப்ராஸ்டிரெக்சர்” “கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா” “ஆலயம் பவுண்டேஷன்ஸ் லிமிடெட்” “கன்ஸ்ட்ரோமால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட்” “இன்விக்டா மெடிட்டெக் லிமிடெட்” “ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்” ஆகிய பினாமி கம்பெனிகளை வைத்து உள்ளாட்சித் துறையின் கீழ் வரும் அனைத்து மாநகராட்சிகளிலும் “கொள்ளையடித்து”, என்றைக்கு இருந்தாலும் ஊழல் வழக்கில் சிறைக் கம்பிகளை எண்ணப் போகின்ற வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவர் கொரோனா காலத்திலும் தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளை கொச்சைப்படுத்துவது “சாத்தான் வேதம் ஓதுவதற்கு” சமம்!
வரலாறு காணாத நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி - அ.தி.மு.க. அரசால் பசியாலும் பட்டினியாலும் கிடந்த மக்களைக் காப்பாற்றிட எடுத்த “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் “அ” “ஆ” கூட தெரியாத வேலுமணிக்கு அந்த “மக்கள் இயக்கம்” பற்றி கேள்வி கேட்பது “குறுக்குப் புத்தி”யே தவிர வேறு ஒன்றுமில்லை.
தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழும் எங்கள் கழகத் தலைவரும், தனிப்பெரும் இயக்கமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஆற்றிய கொரோனா பணிகள் மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கிறது. வேலுமணி போன்ற குறுகிய மனம் படைத்த அமைச்சர்களிடம் இடம் பிடிக்கத் தேவையில்லை.
தமிழகத்தில் “ஒப்பந்த ஊழல்” என்று எடுத்தால் அதில் முதலிடத்தில் இருப்பது அமைச்சர் வேலுமணி தான். உள்ளாட்சித் துறையில் “சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, சேலம் மாநகராட்சி என்று 349 ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள முறைகேடு” குறித்த விசாரணையில் சிக்கி - துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் ஊழல்கடலில் மூழ்கியிருக்கும் வேலுமணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்க்கட்சி பணிகள் குறித்தோ, கொரோனா விழிப்புணர்வு பணிகள் குறித்தோ, எங்கள் கழகத் தலைவர் மற்றும் இயக்கத்தினர் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து ஆற்றியுள்ள பணிகள் குறித்தோ பேசுவதற்கு எள் முனையளவும் தகுதி இல்லை.
ஒரே ஐ.பி. அட்ரஸில் இருந்து இந்த டெண்டர்களை போட்டு - ஊரைக் கொள்ளையடிக்கும் அமைச்சர் வேலுமணி “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைப்பிடிக்கும்” என்பது போன்ற மனநிலையில் இருக்கலாம். ஆனால் அதற்கு அவர் நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டுமே தவிர - கழகத் தொண்டர்கள் உயிராகப் போற்றி மதித்து வரும் எங்கள் கழகத் தலைவர் பற்றி “அநாகரிக அறிக்கை” விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏன், வாயை பொத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.
கோவை இராவணன் இல்லையென்றால் - பிளாட்பாரத்தில் இருந்திருக்கக்கூடிய “பேர்வழிகளுக்கு” எங்கள் கழகத் தலைவர் பற்றி குறைகூறுவதற்கு எந்த தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை என்பதை அமைச்சர் வேலுமணி போன்றவர்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து உணர வேண்டும். ஒருவேளை சிந்தனைக் குறைவு என்றால் அதற்கு நல்ல ஒரு நரம்பியல் மருத்துவரை உடனடியாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஊழல் வழக்கு விசாரணையில் கோர்ட் நோட்டீஸை வாங்காமல் - ஓடி ஒளிந்த “பயந்தாங்கொல்லி” வேலுமணி - வீராப்பு அறிக்கை விடுவதற்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?
“தனி அதிகாரிகளை வைத்து 40 மாதங்களுக்கு மேல் உள்ளாட்சி அமைப்புகளை கொள்ளையடித்த வேலுமணிக்கு” திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி பேசுவதற்கு ஏதாவது யோக்கியதை இருக்கிறதா?
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்கிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. காவலர்களும், மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும் “கொரோனாப் பணியில்” தங்களை ஈடுபடுத்திக் கொள்ள, மாநகராட்சி கமிஷனரை வைத்து அங்குள்ள பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்பதில் வேலுமணி கவனம் செலுத்தி வருவதைப் பார்த்து இந்த நாடே சிரிக்கிறது.
உள்ளாட்சி துறையில் “ஸ்பிரேயர், கிருமி நாசினி, முகக்கவசம்” வரை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகள் எல்லாம் வேறு வழியாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் கொரனா தடுப்பிற்காக ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு, சிறப்பு அதிகாரி, சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ஐந்து அமைச்சர்கள் குழு போடும் அளவிற்கு “நிர்வாகம்” தோல்வியடைந்து நிற்கிறது. தலைமைச் செயலாளரே மாநகராட்சி ஆணையரைக் கண்டித்து கடிதம் எழுதி விட்டார். வேலுமணிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இந்நேரம் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு கோவைக்கு தலை தெறிக்க திரும்பி ஓடியிருக்க வேண்டும்.
அதைச் செய்யாமல் எங்கள் தலைவரைப் பார்த்து விமர்சிப்பது - அடித்த கொள்ளையும், அமைச்சர் பதவியும் இருக்கிறது என்ற ஒரே ஆணவத்தில்தானே!
இன்னும் 11 மாதங்கள்தான் வேலுமணி அவர்களே! “ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது”! பணமும் பதவியும் பின்னே வராது. அடித்த கொள்ளையும், சொத்தும் பின்னே வராது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் காவல்துறை அதிகாரிகளும் வர மாட்டார்கள்.
ஆனால் அன்றைய தினம் - நீங்கள் ஆடிய ஆட்டத்திற்கும், அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டதற்கும், அடக்குமுறையை எங்கள் கழகத் தொண்டர்கள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் ஏவி விட்டதற்கும் - ஒரு முடிவு பிறக்கும். அன்று நீங்கள், பத்திரிகையாளர்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் அடைக்கப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையில் நிச்சயம் அடைக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.