தலைநகர் டெல்லியில் நடந்த வன்முறைகளும் கலவரங்களும் நாட்டையே பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளை இந்துத்வ கும்பல் நாளுக்கு நாள் தொடர்ந்து வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “பா.ஜ.க.வின் எச்.ராஜா மற்றும் கல்யாண் ராமன் ஆகியோர் ட்விட்டர் மூலம் மக்களிடையே மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். தமிழகத்தில் கலவரம் நடந்தால் அதற்கு முழுமுதற் காரணம் இவர்கள் இருவரும்தான்.
டெல்லியில் பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பேசியதற்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அதுபோல, தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.
மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும் வரை ஜனநாயக அமைப்புகளுடன் அறவழியில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
சி.ஏ.ஏவுக்கு எதிராக நாளை மறுநாள் (பிப்.,29) கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.” என தெரிவித்தார்.