கர்நாடக அமைச்சரவை கடந்த 6-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், பா.ஜ.க. மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சி.பி.யோகேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்கும் முடிவுக்கு எதிராக பா.ஜ.க.வில் அதிருப்தி வெடிக்கும் நிலை உருவானது. இதனால் கடைசி நேரத்தில் அந்த 3 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இதனால் மூத்த எம்.எல்.ஏ.வான உமேஷ்கட்டி கடும் அதிருப்தியில் உள்ளார். அவர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 10-க்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் இல்லத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சராக உள்ள எடியூரப்பாவுக்கு எதிராக வந்த கடிதம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், எடியூரப்பா தான் மட்டுமே வளர வேண்டும் என நினைக்கிறார். மூத்த உறுப்பினர்கள் இருக்கும் வேளையில், பாரபட்சமாக எடியூரப்பா செயல்படுகிறார். தன்னை விட யாரும் கட்சியிலோ, ஆட்சியிலோ வளர்ந்துவிடக் கூடாது என எண்ணுகிறார் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்பத்தியுள்ளது.