டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் சூழல் உள்ளது. பா.ஜ.க 8 தொகுதிகளில் வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்களால் வெல்ல முடியும் என்பது டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மிக்கும் வாழ்த்துக்கள். மக்கள் சார்பு, அனைவரையும் உள்ளடகிய ஒரு அரசியலுக்கான அடித்தளமாக இந்த முடிவுகள் இருக்கட்டும்” என்றார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். பாசிசக் கொள்கைகளால் வெல்லமுடியாது என்பதை டெல்லி மக்கள் உணர்த்திவிட்டனர். பணபலம் அரசியல் பலத்தை மீறி வளர்ச்சியை வைத்து ஆம் ஆத்மி வென்றிருக்கிறது” என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். வெறுப்புணர்வைப் பரப்புவோரை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இதன்மூலம் சிலர் அறிந்திருப்பார்கள்.
பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு சிறந்த பாடம்" எனத் தெரிவித்துள்ளார்.