குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கோவளம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையின மக்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு இழைக்கும் துரோகத்தை எடுத்துரைத்தார். இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட அ.தி.மு.கவும் பா.ம.கவும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கையெழுத்துகளைப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்களும், மாணவர்களும் முன்வந்து கையொப்பமிட்டு வருகிறார்கள். கையெழுத்து இயக்கப் பணிகளை மேலும் முடுக்கிவிடுவதற்காக நானே பல பகுதிகளுக்கும் நேரில் சென்று கையெழுத்துப் பெற்று வருகிறேன்.
பல மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். தமிழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.” என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனக் கருத்து தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மாணவர்கள் ஆராய்ந்து, சிந்தித்துப் போராட வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், முதலில் அவர் இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்ந்து, ஆராய்ந்து, சிந்தித்து பதில் அளித்திருக்க வேண்டும்.
அப்படி இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால் ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றுவார் என நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.