குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.கவினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், “இந்தியாவில் 50 லட்சம் இஸ்லாமியர்கள் ஊடுருவல் செய்திருக்கின்றார்கள்.
அவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவர். தேவை ஏற்படுகின்றபோது, அவர்கள் இந்தியாவிலிருந்து விரட்டப்பட இருக்கின்றார்கள். முதலில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்” எனக் கூறினார்.
மேலும், பொதுச் சொத்தை அழிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று நான் கூறி இருந்தேன். பொதுச் சொத்துகளை அழிக்கின்ற இதுபோன்ற ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என நான் மீண்டும் கூறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் அச்சத்தில் உள்ள நிலையில், இவரது பேச்சு இஸ்லாமிய மக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.