பள்ளிகளில் விளையாட்டைக் கட்டாயப்படுத்தவில்லை என்றால் பெற்றோர்கள் விளையாட்டை ஊக்குவிக்க மாட்டார்கள் என சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அவர், ”ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டு நடைபெற உள்ளது. ஆனால், இந்தியா அதிகளவில் பதக்கங்களை வாங்குவதில்லை. இந்தியாவில் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்க வேண்டும். நமது கல்விமுறை விளையாட்டை ஊக்குவிப்பதில்லை. ஏனெனில் நமது கல்விமுறை தேர்வுகள் சார்ந்து உள்ளது.
விளையாட்டைக் கட்டாய பாடமாக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்களுக்கு உடல் தேர்வு வேண்டும். சில பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் கூட இல்லை. மைதானங்கள் இல்லாத பள்ளிகளுக்கு வழங்கபட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பள்ளியில் உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் தாமதமாக வரும் மாணவர்களை தண்டிக்கவே பயன்படுத்தப் படுகின்றனர்.
பொதுத்தேர்வு எழுத விளையாட்டைக் கட்டாய அளவுகோலாக்க வேண்டும். ஏனெனில், இன்றைய பெற்றோர்கள் தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து விளையாட்டைப் புறக்கணிக்கின்றனர்.
விளையாட்டை கட்டாயப் படுத்தவில்லை என்றால் பெற்றோர்கள் விளையாட்டை ஊக்குவிக்க மாட்டார்கள். இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்க இதுவே ஒரு வழி” எனத் தெரிவித்தார்.