மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பதவியேற்றார்.
கூட்டணி ஆட்சி முறையாக நடத்திட குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மும்பையில் மஹாராஷ்டிர வளர்ச்சி முன்னணி கூட்டணி சார்பான குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியிடப்பட்டது.
அதில், ''அரசியல் சாசனம் வரையறுத்துள்ள மதச்சார்பின்மையை உறுதி செய்ய இக்கூட்டணி பாடுபடும். மதச்சார்பின்மைக் குறித்து பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டால் மூன்று கட்சிகளும் கலந்தாலோசித்து ஒரே பார்வையை முன்வைக்கும்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்படும். உடனடியாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதற்கு ஏற்ப பயிர் காப்பீட்டு திட்டம் திருத்தப்படும்.
வேலைவாய்ப்பின்மை பிரச்னையை சமாளிக்க மாநில அரசில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப செயல்முறை திட்டம் உடனடியாக தொடங்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மகாராஷ்டிரா மாநில இளைஞர்களுக்கு வேலையில் 80% இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும்.
பெண்களின் பாதுகாப்பிற்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு கல்வி இலவசம். வேலைபார்க்கும் பெண்களுக்காக மாநகரங்களில் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஹாஸ்டல் உருவாக்கப்படும்.
குறைவான விலையில் சிறப்பான சுகாதார வசதியை ஏற்படுத்த தாலுகா அளவில் ஒரு ரூபாய் கிளினிக் தொடங்கப்படும். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்.
சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தன்மையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும். சமூக நீதியை உறுதிசெய்யும் வகையில் அவர்களுக்கு உணவு, உடை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்க கவனம் செலுத்துவோம்.
குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 300 சதுர அடி நிலத்திற்கு பதில் 500 சதுர அடியாக நிலம் வழங்கப்படும். சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலாத் தலங்களில் சிறப்பு வசதிகள் ஏற்டபடுத்தப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா அரசில் இரண்டு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும், அதில் ஒன்று மாநில அமைச்சரவையின் ஒருங்கிணைப்புக்காகவும், மற்றொன்று கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காகவும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர வளர்ச்சி முன்னணி கூட்டணி சார்பான குறைந்தபட்ச செயல்திட்டதிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இவர்கள் வெளியிட்டுள்ள செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகளுக்கு, முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள் முன்னோடியாக இருந்துள்ளன. மஹாராஷ்டிராவில் இப்போது கொண்டுவரப்படும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கலைஞர் அவர்களால் தமிழகத்தில் ஏற்கனவே கொண்டுவரப்பட்டது.
குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலம் 500 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் கலைஞர் அவர்களால் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன.
இதுபோன்று விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு, தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இட ஒதுக்கீடு, எண்ணற்ற மக்கள்நல திட்டங்கள் கலைஞர் அவர்களால் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.