முன்னாள் தி.மு.க தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது சமத்துவபுரம் திட்டம். இத்திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிகுமார் இன்று மக்களவையில் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அவர், ''கலைஞர் அவர்களால் ஒரு வித்தியாசமான முன்மாதிரி திட்டமாக உருவாக்கப்பட்டது சமத்துவபுரம். இதன்படி அமைந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் சமம்.
இந்த திட்டத்தின்படி ஊரகப்பகுதிகளில் தமிழக அரசின் நிதி உதவியுடன் சில மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டன. இதில் வாழும் அனைத்து மக்களும் தங்களுக்குள் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை.
ஒற்றுமையுடனும் அடிப்படை வசதிகளை தங்களுக்குள் பாரபட்சமின்றி பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த கிராமங்களில் அமையும் 100 வீடுகளில் தலித்கள் 40, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தலா 25, மீதியுள்ள பத்து வீடுகளில் மற்ற சமூகத்தினரும் வாழ்கின்றனர்.
தங்களுக்குள் வித்தியாசம் காட்டாமல் இருக்க வேண்டி அனைவருக்கும் பொதுவாக என சமூக அரங்கம் மற்றும் இடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் தற்போது 145 சமத்துவபுரங்கள் உள்ளன.
நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டவும், சாதி வேறுபாடுகளை களையவும் இந்த சமத்துவபுரங்கள் முக்கியமாக உள்ளன. எனவே, இதுபோன்ற நல்ல முன்மாதிரியான சமத்துவபுரக் கிராமங்களை நாட்டின் மற்ற பகுதிகளிலும் மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோருகிறேன்'' எனத் தெரிவித்தார்.