இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் அதிகாரம், ஆட்சி மற்றும் பணபலம் வெற்றி பெற்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி , நாங்குநேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி 2021ல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத்தேர்தலுக்கான முன்னோட்டம் என முதலமைச்சர் கூறியிருப்பது எதார்த்தத்திற்கு பொருத்தமற்றதாகும்.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதும், அடுத்து நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அதே கட்சி படுதோல்வி அடைவதும் தமிழக தேர்தல் வரலாற்றில் வழக்கமான ஒன்றே. ஆகவே, முதல்வரின் கூற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் அதிகாரம், ஆட்சி மற்றும் பணபலம் வெற்றி பெற்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதற்கெல்லாம் ஆட்படாமல் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலிலும் மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணியின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் தனது ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 5 தொகுதிகளிலும் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது.
ஒப்பு நோக்கில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலில் பெரும் பின்னடைவை இத்தேர்தலில் பா.ஜ.க சந்தித்துள்ளது. மோடி - அமித்ஷா அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வருவதின் தொடக்கமே இத்தேர்தல் முடிவுகள் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.