இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஎம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான என்.சங்கரய்யா செங்கொடி ஏற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கிளை உருவாகி நூறு ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் அளப்பரிய தியாகங்களை போராட்டங்களை இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்லும் வண்ணம் கருத்தரங்குகள், வகுப்புகள், பிரச்சாரங்கள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மதவெறி அரசாங்கத்தை சந்திக்கவேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருப்பதாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு சார்பாகவும் ஒற்றைக் கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிக்கும், அரசியல் சாசனத்தையே மாற்ற முயலும் மத்திய மோடி அரசாங்கத்தை சமாளிக்க வேண்டிய பணியை இடதுசாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.