விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாம்பழப்பட்டு பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு தருகின்றனர். இதைப் பார்க்கும்போது தி.மு.க வேட்பாளர் புகழேந்தி அமோக வெற்றி பெறுவது உறுதியாகத் தெரிகிறது.
தமிழகம் முதல்வராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியவர் ஓ.பி.எஸ். ஆனால் விசாரணை ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியபோது ஓ.பி.எஸ் நேரில் ஆஜராகவில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று நம் தலைவர் கூறியுள்ளார்.
மறைந்த ராதாமணி இந்தப் பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டார். இந்தப் பகுதியில் தி.மு.க ஆட்சியில் 200 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. கால்நடை மருத்துவமனை அமைத்துத் தரப்பட்டது. சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய ஆட்சியில் இந்தப் பகுதிக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஒரு கேடுகெட்ட ஆட்சி நடைபெறுகிறது. அவர்களுக்குப் பாடம் புகட்ட தி.மு.க வேட்பாளர் புகழேந்தி அவர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தந்தீர்கள். அ.தி.மு.க கூட்டணிக்கு சரியான சவுக்கடி கொடுத்தீர்கள்.
முதல்வர் எடப்பாடி மோடியின் எடுபிடியாக இருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்” என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.