அரசியல்

“மருத்துவர் அய்யாவுக்கு இதனால் தான் கோபமா?” - ராமதாஸை விளாசிய தி.மு.க எம்.எல்.ஏ!

ராமதாஸுக்கு “தான் மட்டுமே வன்னியர் சமுதாயத் தலைவர் என்று உருவாக்கிய தோற்றத்தை உடைத்து விட்டார்களே” என்ற கோபமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தி.மு.க மா.செ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

 “மருத்துவர் அய்யாவுக்கு இதனால் தான் கோபமா?” - ராமதாஸை விளாசிய தி.மு.க எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு தி.மு.க மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தன்னையும், தனது மகனையும் சிறையில் அடைத்து, வன்னியர் சமுதாயத்தை கேலியும் கிண்டலும் பேசிய அ.தி.மு.கவிற்கு வக்காலத்து வாங்கி, எங்கள் கழகத் தலைவரை விமர்சித்துள்ள மருத்துவர் அய்யா ராமதாஸுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவரய்யாவுக்கு தி.மு.க.வின் மீது வந்த திடீர் கோபம் என்ன?

“நமக்கு அடிமையாகக் கிடந்த வன்னியர் பெருமக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கலெக்டர்களாகவும், எஸ்.பி.களாகவும், க்ரூப்-1 அதிகாரிகளாகவும், டாக்டர்கள், எஞ்சினியர்களாகவும் ஆக்கி விட்டாரே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்” என்ற கோபமா? “காடுவெட்டி குருவை ஒரு முறைக்கு பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிடலைத்த அ.தி.மு.கவிற்குப் பதில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னியர் சமுதாயத்தினர் மீது பதிவு செய்த வழக்குகளை எல்லாம் தி.மு.க ஆட்சி ரத்து செய்து விட்டதே” என்ற கோபமா?

“வன்னியர் சமுதாயத்தின் தன்னிகரில்லாத் தலைவர்கள் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாருக்கு முழு உருவச் சிலை வைத்து, இப்போது ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று அறிவித்து, தான் மட்டுமே வன்னியர் சமுதாயத் தலைவர் என்று உருவாக்கிய தோற்றத்தை உடைத்து விட்டார்களே” என்ற கோபமா? “இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த வன்னிய சமுதாய இளைஞர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்ததில் கோபமா? என்று கேட்க விரும்புகிறேன்.

 “மருத்துவர் அய்யாவுக்கு இதனால் தான் கோபமா?” - ராமதாஸை விளாசிய தி.மு.க எம்.எல்.ஏ!

மருத்துவரய்யா கோபப்படும் அளவிற்கு எங்கள் கழகத் தலைவர் என்ன சொல்லிவிட்டார்? தி.மு.க. ஆட்சியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கினார். போராட்டமே செய்யாமல் ஆலிவர் ரோட்டிற்கு டாக்டர் அய்யாவை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்கியதைச் சொன்னார். வன்னியர் சமுதாய அதிகாரிகளை கல்வித்துறையிலும், காவல்துறையிலும் உயர் பதவியில் வைத்து அழகு பார்த்ததைச் சொன்னார். வன்னியர் சமுதாயப் பெருமைகளை பேசியதற்காக மருத்துவய்யா இப்படி கோபித்து- கொந்தளிப்பது ஏன்?

தன்னை ஜெயிலில் போட்டவர்களுக்கும்- உடல்நிலை குன்றிப் போன நிலையிலும் காடுவெட்டி குருவை அங்கும் இங்கும் பழுதான போலிஸ் வேனில் இழுத்தடித்தாரே - அந்த அ.தி.மு.கவிற்கு ஆதரவு திரட்டவா? “ஒவ்வொரு நீதிமன்றமாக அலைக்கழிப்பதற்கு பதில் என்னை ஒரே விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள்” என்று ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் கதறினாரே காடுவெட்டி குரு; அந்த அ.தி.மு.க ஆட்சிக்கு ஆதரவு திரட்டவா? அல்லது, உங்களையும், குருவையும் கொடுமைப்படுத்திய அ.தி.மு.கவுடன் வைத்துள்ள கூட்டணி பாசமும், தைலாபுர விருந்தின் “மகத்துவமும்தான்” இந்த கொந்தளிப்பிற்கு காரணம் என்றால் அதற்கு எங்கள் கழகத் தலைவர் பொறுப்பாக முடியாது.

 “மருத்துவர் அய்யாவுக்கு இதனால் தான் கோபமா?” - ராமதாஸை விளாசிய தி.மு.க எம்.எல்.ஏ!


அ.தி.மு.க-விற்கு விருந்து வையுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படி விருந்து வைத்ததற்காக வன்னியர் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க.வை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களை மட்டுமின்றி - பா.ம.க நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் போட்டு நீதிமன்றங்களின் படிக்கட்டுக்களில் இன்றைக்கும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்திய அ.தி.மு.கவிற்கு சாமரம் வீசுங்கள். ஆனால் உங்கள் மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க.வை வம்புக்கு இழுக்காதீர்கள். ஆனால், சமூக நீதிக்காக போராடிய மருத்துவரய்யா இன்றைக்கு யார் யாருக்கு எல்லாம் காவடி தூக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் என்பதைப் பார்க்கும்போது என்னைப் போன்றோருக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

“உங்களின் சொந்த லாபத்திற்காக எங்களை அடகு வைத்தது போதும்” என்று வன்னியர் சமுதாய மக்கள் என்றைக்கோ உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டார்கள். தி.மு.க கூட்டணியை விட்டு சென்றதில் இருந்து தோல்வி மேல் தோல்வியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் அருமைப் புதல்வரை தருமபுரியில் தோற்கடிக்கப்பட்டபோதே பாராளுமன்றத் தேர்தலில் தங்களது பொருந்தாக் கூட்டணிக்கு வன்னியர் சமுதாயம் தக்க பதிலடி தந்துவிட்டது. இன்னொரு பதிலடி விக்ரவாண்டி தொகுதியில் கிடைக்கப் போகிறது. அதனால்தான் இப்போது தி.மு.கவின் மீது வன்னியர் சமுதாயத்திற்கு இருக்கும் பற்றுதலை உடைக்க ஏதோ பழங்கதைகளை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்.

 “மருத்துவர் அய்யாவுக்கு இதனால் தான் கோபமா?” - ராமதாஸை விளாசிய தி.மு.க எம்.எல்.ஏ!

எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் “போராட்டங்கள்” ஏதுமின்றி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அளித்தவர். வன்னியர் சமுதாயத்தின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக தினம் தினம் யோசித்து ஆட்சியிலிருந்த போதெல்லாம் அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர். அதை வேண்டுமென்றால்- ஒரு தனி மேடையில் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். ஒரு வேளை நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் அருமைப் புதல்வரை அனுப்பி வையுங்கள். வன்னியர் சமுதாயத்திற்கு நன்மை செய்தது அ.தி.மு.கவா அல்லது தி.மு.க.வா என்று ஒரு விவாதத்தை நடத்திப் பார்ப்போம்.

என்னைப் போன்று எத்தனையோ வன்னிய சமுதாயத்தினரை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக - ஏன் மத்திய அமைச்சராக உயர்பதவியில் பார்த்து அழகு பார்த்தவர் எங்கள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். ஏ.ஜி. அவர்கள் உங்களுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர். அவருக்கு பெருமை சேர்க்க எங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அது பற்றி இதுவரை தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்த காலத்திலாவது நீங்கள் வாய் திறந்து கேட்டதுண்டா? ஏனென்றால் இந்த சமுதாயத்தில் வேறு யாருக்கும் சிறப்பு சேர்ப்பது தங்களுக்குப் பிடிக்காது. அதற்காக தி.மு.க பொறுப்பாக முடியாது.

கட்சி துவங்கியதில் இருந்து தாங்கள் தனது குடும்பத்திற்காக மட்டுமே கூட்டணி வைத்ததை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். தனது குடும்பத்திற்காகவே ராஜ்யசபா பதவி கேட்டுப் பெற்றதை நினைவில் வைத்துள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில் தனது மகன் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே வைத்த கூட்டணிகளை இந்த சமுதாயம் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. தங்களைப் பற்றியும் - தாங்கள் இந்த வன்னியர் சமுதாயத்தைப் பயன்படுத்தியது பற்றியும் வெளிவந்த புத்தகங்கள் இன்னும் என் அலமாரியில்தான் இருக்கின்றன.

 “மருத்துவர் அய்யாவுக்கு இதனால் தான் கோபமா?” - ராமதாஸை விளாசிய தி.மு.க எம்.எல்.ஏ!


உங்கள் அருமைப் புதல்வரை 2016-ல் முதல்வராக்க முயற்சித்து தோற்று நிற்கின்ற விரக்தியில் தங்களுக்குப் பொருந்திய பழமொழியை எங்கள் கழகத் தலைவர் பக்கம் தயவு செய்து திருப்பி விடாதீர்கள். அதை நான் திருப்பிச் சொன்னால் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்த பண்பாட்டிலிருந்து தவறுவதாகும். அதற்கு மாறாக வேறு பழமொழியை உங்களுக்கு நான் சொன்னாலும் எங்கள் கழகத் தலைவர் கற்றுத் தந்துள்ள நாகரீகத்திற்கு புறம்பானதாகும்.

ஆகவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் போவது நிச்சயம். அது கனவல்ல- நிஜம். அப்போது கலைஞர் எப்படி வன்னியர் சமுதாயத்திற்காக பல்வேறு அரிய சாதனைகளை செய்தாரோ, அதேபோல் பல சாதனைகளை மட்டுமின்றி, அறிக்கை வாயிலாக கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, வன்னியர் சமுதாயத்திற்கு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமை சேர்ப்பார். அந்தக் காட்சிகளை நீங்களும் காண்பீர்கள்! அப்போது நீங்கள் உணர மறுத்தாலும், வன்னியர் சமுதாயப் பெருமக்கள் நன்கு உணருவார்கள் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

banner

Related Stories

Related Stories