மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007ம் ஆண்டு அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விதிமுறையை மீறி சர்க்கரை ஆலை மற்றும் நூற்பு ஆலைகளுக்கு கடன் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனால் மும்பை போலிஸார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் மற்றும் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான சரத் பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் அரசாங்கத்தால் சமீபத்தில் குறிவைக்கப்பட்டவர் சரத்பவார். மஹராஷ்ட்ராவில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்த நடவடிக்கை எடுத்திருப்பது அரசியல் சந்தர்ப்பவாதம்'' எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.