உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்தா. பா.ஜ.க சார்பில் 3 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
இவரது கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர், சின்மயானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி வீடியோ ஆதாரத்தை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சின்மயானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி சிறப்பு விசாரணை குழுவால் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். 2 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த சின்மயானந்தா, தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சின்மயானந்தாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக இந்த மாணவி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரில் கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டார். உத்திரபிரதேச போலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து உ.பி மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “உன்னாவ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார்.
பெண்ணின் மாமா கைது செய்யப்பட்டார். 13 மாதமாக மகள் கொடுத்த அழுத்தத்துக்குப்பின், குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பாதிப்புக்குள்ளான பெண்ணின் குடும்பத்தின் மீது கொலை முயற்சி நடந்தது” என்று உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் அதில், “ ஷாஜகான்பூர் பலாத்கார வழக்கில் தற்போது பாதிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் தந்தைக்கு அதிகாரத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. குற்றவாளி பா.ஜ.க தலைவர் மீது இன்னும் பாலியல் பலத்தகார வழக்கு குறித்த குற்றம் சுமத்தப்படவில்லை. இதுதான் பா.ஜ.க-வின் நீதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.