ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அக்., 3ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று காலை திகார் சிறைக்குச் சென்று ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். அப்போது கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்தார்.
ப.சிதம்பரத்தை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து, எப்போதும் அவருக்கு துணையாக இருப்போம் என காங்கிரஸ் கூறிவருகிறது. இவ்வாறு இருக்கையில் இன்று சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் அவரை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ட்விட்டரில் ப.சிதம்பரம் சார்பில் பதிவிடப்பட்ட ட்வீட்டில், சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் என்னை சந்தித்தது பெருமைக்குரியது என்றும், காங்கிரஸ் கட்சி தைரியமாகவும், வலுவாகவும் இருக்கும் வரை நானும் தைரியமாக இருப்பேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், வேலைவாய்ப்பின்மை, வேலை இழப்பு, குறைந்த ஊதியம், கும்பல் வன்முறை, காஷ்மீரில் அடக்குமுறை, எதிர்க்கட்சியினரை சிறையில் தள்ளுவது போன்றவற்றைத் தவிர இந்தியா மிகவும் நன்றாக இருக்கிறது என மோடி அரசை சாடும் வகையில் கிண்டலாகவும் பதிவிடப்பட்டுள்ளது.