கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் காட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தார். தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன் கர்நாடகாவின் 15 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலியாக உள்ள மஸ்கி மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும். கூட்டணி ஆட்சியின் போது முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சியால் பட்ட துன்பங்கள் போதும்'' என தெரிவித்தார்.