ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டார். அதன்படி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு இன்று 74வது பிறந்தநாள். இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
2 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், டியர் அப்பா, இன்று நீங்கள் 74 வயதை எட்டியுள்ளீர்கள். உங்களை எந்த 56' ஆலும் தடுத்து நிறுத்த முடியாது. நம் நாட்டில் சிறிய விஷயங்களுக்கு கூட தற்போது பெரிதாக கொண்டாடுகிறார்கள், ஆனால் பெரிய விஷயங்களுக்கான கொண்டாட்டத்தை கூட நீங்கள் விரும்பியதில்லை.
எங்களுடன் நீங்கள் இல்லாத இந்தப் பிறந்தநாள் எப்போதும் போல இருக்காது. நாங்கள் உங்களை அதிகமாக மிஸ் செய்கிறோம். எங்கள் அனைவருடனும் இணைந்து கேக் வெட்ட நீங்கள் விரைவில் வீடு திரும்பவேண்டும் என விரும்புகிறேன். டெல்லி கூட்டத்திற்கு முன்னால் நீங்கள் ஒருபோதும் அமைதியாக இருக்கப்போவதில்லை. உங்களுக்கு செய்தித்தாளும், தொலைக்காட்சி பார்க்கும் அனுமதியும் வழங்கப்பட்டிருப்பதை அறிவேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் தற்போது அவர்களது சுதந்திரம் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். தற்போது நடக்கும் அரசியல் நாடகத்துக்கு எதிராக துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா போலச் சிறையிலிருந்து நீங்கள் வருவீர்கள், உண்மையான உங்கள் வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். அன்புடன் கார்த்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ப.சிதம்பரம் சிறை சென்ற பிறகு நடைபெற்ற பா.ஜ.க அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு, சந்திரயான், ஹாங்காங் போராட்டம், ரஃபேல் நடாலின் வெற்றி போன்ற பல விஷயங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.