ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனவர் அல்கா லம்பா. கல்லூரி காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான என்.எஸ்.யூ.ஐ. மாநிலத் தலைவராக இருந்து அரசியலில் நுழைந்தவர்.
டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருந்தவர். 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மோதி நகர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2007 ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தபோது, அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பெயரை அடையாளப்படுத்தியதற்காக பதவி இழந்தவர். டெல்லியில் ஒரு மதுக்கடையை அடித்து நொறுக்கியதிலும் அல்கா லம்பா அதிரடி புகழடைந்தவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவருக்கு சாந்தினி சவுக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அரவிந்த் கெஜ்ரிவால் டிக்கெட் வழங்கினார்.
தன்னார்வ குழுவைத் தொடங்கி பல்வேறு அரசியல், சமூக பிரச்னைகளில் தலையிட்டவர். 250 மாவட்டங்களில் ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாராட்டப்பட்டவர் அல்கா லம்பா.
கடந்த சில மாதங்களாக கட்சியில் மோதல்போக்கை கடைபிடித்து வந்த இவர் பாராளுமன்றத் தேர்தலின் போது கட்சிக்காக பிரசாரம் செய்யவில்லை. இதனைத்தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குழுவில் இருந்து அல்கா லம்பாவை நீக்கியது.
இதனிடையே, கட்சிக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு சுதந்திரமாக அடுத்த தேர்தலை சந்திக்க இருப்பதாக நேற்று ட்விட் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தும் பேசியிருக்கிறார்.
அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் சேரப்போவது உறுதியாகி விட்டது. மீண்டும் தாய் கட்சியில் அவர் சேர இருப்பதைத் தான் இவ்வாறு ட்விட்டரில் தெரிவித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.