பா.ஜ.க இரண்டாவது முறையாக மத்திய அரசில் பதவியேற்றதில் இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்வதில் அக்கறை செலுத்தாமல், தனது அரசியல் பழிவாங்கலுக்காக எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலேயே முனைப்போடு உள்ளது.
அந்த வகையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கடந்த 21ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்ய வைத்து இன்றளவும் அவரை மனதளவில் சித்ரவதை செய்து வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு.
இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மட்டுமல்லாமல், அரசின் நிர்வாக சீர்கேடுகளை விமர்சிக்கும், குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகளை அடியோடு அழிக்கும் வகையில், தனது கைப்பாவையாக உள்ள அரசுத் துறைகளைக் கொண்டு ஒடுக்கும் செயலாகவே கருதப்படுகிறது.
ப.சிதம்பரத்தை அடுத்து, கர்நாடக மாநில காங்கிரஸின் மூத்த தலைவரும் , முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமாரையும் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் இரவு கைது செய்தது.
அதன் பிறகு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் டி.கே. சிவகுமார் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவகுமாரிடம் பணப்பரிமாற்ற வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்பதால் 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை கேட்டது. அதற்கு 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் பிடியில் உள்ள டி.கே.சிவகுமாரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாற்காலி ஒன்றில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தபடி “நாட்டில் சட்டத்தை விட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மிகவும் வலிமையானது” என சிவகுமார் பேசியுள்ளார். அமலாக்கத்துறை காவலில் இருக்கும்போது சிவகுமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.