மோசமான தோல்விகளை திசைத்திருப்பும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய்வழக்குகளை போட்டு அரசியல் பழித்தீர்க்கும் நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வருகிறது பா.ஜ.க. அரசு என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மோடி அரசு, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசியல் எதிரிகளை பொய் வழக்குகள் மூலம் பழித்தீர்த்து வருகிறது. கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார், தேவையுறும் போது அனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து ஆஜராகியுள்ளார்.
ஆனால், அவர் மீது தற்போது பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் விசாரணை வளையத்துக்கு உட்படுத்தப்படும் என்ற பாஜகவின் நடவடிக்கை தொடர்ந்தாலும், மோடி அரசை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என தெரிவித்துள்ளார்.