அரசியல்

உள்ளூரிலேயே முதலமைச்சர் ஒன்றும் கிழிக்கவில்லை, வெளிநாட்டில் என்ன செய்யப் போகிறார்? - கனிமொழி எம்.பி

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

உள்ளூரிலேயே முதலமைச்சர் ஒன்றும் கிழிக்கவில்லை, வெளிநாட்டில் என்ன செய்யப் போகிறார்?  - கனிமொழி எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தி.மு.க கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி சென்ற கனிமொழி எம்.பி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்கமுடிகிறது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது. கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதும் அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

தற்போது ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. எனவே ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும்.” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப் பயணம் பற்றி பேசிய அவர், ” தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி எந்த முதலீடும் வராத நிலையில், இவர் வெளிநாட்டிற்கு சென்று என்ன செய்கிறார் என்று பார்ப்போம்'' என தெரிவித்தார்

பின்னர் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைந்தது குறித்து பேசிய அவர் ''தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் உள்ள பல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய பணிகளை பார்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் அவரின் சகோதரி என்ற முறையிலும் நான் பெருமைப்படுகிறேன்'' என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories