ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்றிரவு ப.சிதம்பரம் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கைது குறித்து எம்.பி., கார்த்தி சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “பா.ஜ.க அரசு எனது தந்தையை மட்டும் குறிவைத்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுவதாக தெரியவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்தே செயல்படுகிறது. அதுமட்டுமின்றி அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இந்த நடவடிக்கை அரசியல் காழ்புணர்ச்சி தான். எனவே காழ்புணர்ச்சியுடன் செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நான் போராட்டம் நடத்தப்போகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இதற்கு முன்னதாக இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரை நான் பார்த்ததேயில்லை. எந்த ஒரு விசாரணை அமைப்பு முன்பும் ஆஜராகி பதில் சொல்ல என் தந்தைக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாத போது கைது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.