தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த விலையேற்றத்தை குறைக்க வேண்டி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மது விலையை உயர்த்தி, பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆவின் பால் விலையை திடீரென்று லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்த்துவதாக ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது - சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினரை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
பால் ஊட்டச் சத்துணவு; ஏழை, எளிய தொழிலாளர்கள், வீட்டவர்களுக்கு காபி, டீ அருந்துதல் தவிர்க்க முடியாத அன்றாடப் பழக்கமாகிவிட்ட நிலையில், பால், முட்டை போன்றவைகளின் விலைகளை தமிழக அரசு உயர்த்தி, மக்களின் - குடும்பத் தலைவிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல், தவிர்க்கவேண்டும் - மறுபரிசீலனை செய்யவேண்டும் !
மாட்டுத் தீவனங்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலையைத் தரவேண்டாமா? என்ற கேள்வி எழலாம். அது மக்கள் நல அரசில் பல இலவசத் திட்டங்கள் தருவதைக் கூட குறைத்து, இவர்களுக்கு விலைக் குறைத்து, உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையைக் கூட்டி, மானியம் (Subsidy) போன்ற உதவித் தொகை தருவதுபோல தரலாமே!
பால் விலையை ஏற்றாமல், டாஸ்மாக்கில் குடிகாரர்களுக்கு விற்கப்படும் போதை மது வகைகளுக்கு விலை ஏற்றலாம்; அத்தொகை கூடுதல் வருமானம். அதிக விலை என்பதால், டாஸ்மாக் குடிகாரர்களின் கொள்முதல் குறைந்து, குடிப்பவர்கள் அளவும் குறைந்தால், அவர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி ஆரோக்கியமானது அல்லவா! ‘குடி குடியைக் கெடுக்கும்‘ என்று போர்டு எழுதி வைப்பது ஒரு சடங்காச்சார சங்கதி.
எனவே, மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைத்து - உற்பத்தியாளர் நலன் - உரிமை - நுகர்வோர் நலன் - உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டியது அவசியம்'' இவ்வாறுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.