தீரர் சத்தியமூர்த்தி மற்றும் மூப்பனார் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருவுருவப் படத்திற்கும் வளாகத்தில் உள்ள தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் திருஉருவச் சிலைக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ''பிரதமர் மோடி அவர்கள் இந்திய முப்படைகளுக்கு ஒரே தளபதி நியமிப்பதாக அறிவித்திருந்தார். ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதற்கான நகர்வுகளில் இதுவும் ஒன்று. பா.ஜ.க மோடி அரசு ராணுவத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள்.
ஒரே தலைமையின் கீழ் இராணுவம் இருந்த காரணத்தினால் தான் காஷ்மீரில் ராணுவ புரட்சியும், இராணுவ ஆட்சியும் நடைபெற்றது. இந்தியாவில் இதுவரை இதுபோன்ற நிகழாததற்குக் காரணம் காங்கிரஸ் ஆட்சி தான்.
முதல் முதலாக அணுகுண்டை சோதனை செய்தார் இந்திரா காந்தி. அவரது ஆட்சிக் காலத்தில்தான் அணுசக்தி பயன்படுத்தப்பட்டது.
அதோடு முதலில் மற்ற நாடுகள் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம் என்றார். எதிரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே பயன்படுத்துவோம் என அரசாங்கம் தெளிவாக தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வாஜ்பாய் ஆட்சியின் போதுகூட இது பின்பற்றப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் அணுசக்தி பயன்படுத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பால் விலை உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இதனை அரசாங்கம் மானியம் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். உற்பத்தியாளர்களும் அதே நேரத்தில் மக்களும் சிரமத்திற்கு ஆளாகாதபடி இதனை அரசாங்கம் செய்ய வேண்டும்.'' என தெரிவித்தார்.