தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்களின் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை. ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிக்கொண்டு எப்படி புதிது புதிதாக கமிஷன் அடிக்கலாம் என்பதில் தான் அவரது கவனம் முழுவதும் இருக்கிறது.
போதாக்குறைக்கு, யாரையாவது பற்றி எக்குத்தப்பாக விமர்சனம் வைப்பதே எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது. இன்றைய நாளில் மட்டுமே அவர் பேசியிருக்கும் விஷயங்கள் எடப்பாடியின் உளறலுக்குச் சாட்சி.
நீலகிரியில் பெய்து வரும் கன மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆளும் முதல்வரோ, அமைச்சர்களோ யாரும் நேரில் சென்று பார்வையிடாத சூழலில், இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மக்களைச் சந்தித்து வந்தார் மு.க.ஸ்டாலின்.
ஆனால், அவரைப் பற்றி, “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட மக்களைச் சந்தித்து அரசைக் குறை சொல்கிறார்” என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தானும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாமல், மக்களைச் சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மீதும் விமர்சனங்களை வைக்கும் முதல்வரை மக்களே என்ன செய்வதெனத் தெரியாமல் நொந்துகொள்கிறார்கள்.
தொடர்ந்து, “ப.சிதம்பரம் பலமுறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தார். அவர் தமிழகத்திற்கு என்ன திட்டத்தைக் கொண்டு வந்தார்? பூமிக்குத்தான் பாரமாக இருக்கிறார்.” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கீழ்த்தரமாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததற்கு திருப்பதி ஏழுமலையான் அருளே காரணம்” என்றும் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் கடும் வறட்சிக்குப் பின்னர் இப்போது மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், நீர்வரத்துக்கு ஏழுமலையான் காரணம் என்றால், முன்னர் நிலவிய வறட்சிக்கு யார் காரணம் என மக்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.